சென்னை:ஜெர்மன் நாட்டின் ஃபிராங்க் பார்ட் நகரில் இருந்து லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நள்ளிரவு 12 மணிக்கு சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து அதிகாலை 1.50 மணிக்கு ஃபிராங்க் பார்ட் புறப்பட்டு செல்லும். அந்த வகையில் நேற்று நள்ளிரவு 232 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்தது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த, சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த 92 வயதான ஜெகநாதன் என்ற முதியவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விமான பணிப்பெண்கள் அந்த முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததோடு, விமான கேப்டனுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதை அடுத்து விமான கேப்டன் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்து, விமானம் சென்னையில் தரையிறங்கியதும், முதியவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக விமான நிலைய மருத்துவ குழுவினரை தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார்.
விமானம் நேற்று நள்ளிரவில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரை இறங்கியதும், உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினர், விமானத்துக்குள் வந்து, பயணி ஜெகநாதனை பரிசோதித்தனர். அவர் விமான இருக்கையில் சாய்ந்த படி இருந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர் கடுமையான மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.