திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட இராமசந்திராபுரம் பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த துவக்கப் பள்ளியில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்காக பள்ளி வளாகத்தில் இருந்த கட்டிடத்தை அதிகாரிகள் இடித்துள்ளனர்.
இந்நிலையில், பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரையில் புதிய கட்டிடம் கட்டித் தரவில்லை என்றும், அதனால் மாணவர்கள் வகுப்பறை இல்லாமல் திறந்த வெளியில் அமர்ந்து கல்வி பயில்வதாகவும், மேலும் மழைக் காலங்களில் சேறும் சகதியிலும் மாணவர்கள் அமரும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
மேலும், தற்போது மழைக்காலம் என்பதால் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் வருவதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை எனக் கூறி மாணவர்களின் பெற்றோர், பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து ஆம்பூர் - பேர்ணாம்பட் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையிலான காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் ஆத்திரமடைந்த பெற்றோர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.