விழுப்புரம்:அடுத்த விக்கிரவாண்டியில் திறந்தவெளி கிணற்றில், மனித மலம் கழிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ள நிலையில், கிணற்றில் ஆய்வு செய்த கூடுதல் ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் திறந்தவெளி கிணற்றில், மனித மலம் கழிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரைத்தான் கே.ஆர்.பாளையம் கிராமத்தில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு விநியோகிப்படுவதாகவும் அப்பகுதி கிராம மக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதேபோன்று ஒரு சம்பவமா என பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், சம்பவம் குறித்துத் தகவலறிந்த கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே அமைந்துள்ள கஞ்சனூர் பகுதியில் பொது குடிநீர் கிணற்றில் மலம் கலப்பு சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கிணற்றுக்குள் 'தேன் அடை':தற்போது இந்த ஆய்வின் முடிவில், கிணற்றில் கிடந்தது மலமில்லை எனவும், 'தேன் அடை' எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கஞ்சனூர் மதுரா கே.ஆர்.பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் கிணற்றில் மலம் கலப்பு என சில தனியார் தொலைக்காட்சிகளில் இன்று வரப்பெற்ற செய்தி முற்றிலும் தவறான செய்தியாகும்.