சென்னை:தென் இந்தியர்கள் அதிகம் விரும்பும் காலை உணவு என்கிற இடத்தை தோசை பிடித்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. மனநிலைக்கு ஏற்றவாறு மசால் தோசை, ரவா தோசை நெய் தோசை, பொடி தோசை என வகைவகையான தோசைகளை மக்கள் ருசித்து வருகின்றனர்.
பொதுவாக தென்னிந்தியர்கள் தோசைக்கு சட்னி, சாம்பார், பொடி ஆகியவற்றை தொட்டு சாப்பிடுவது வழக்கம். தின்ன தின்ன ஆசை என்பதற்கு உதாரணமாக காலை மட்டுமல்லாமல், எந்த வேளையாக இருந்தாலும் ஆசையாக தோசை உண்ணும் மக்கள் இருக்கிறார்கள். அப்படி வாழ்வின் அங்கமாக இருக்கும் தோசைக்கு இன்று ஒரு சிறப்பான நாள். ஆம், இன்று (மார்ச்.03) உலக தோசை தினம்.
தோசையின் வரலாறு: தென்னிந்தியர்கள் விரும்பும் தோசை, தற்போது இந்தியா முதல் இங்கிலாந்து வரை பிரபலமாகி உள்ளது. 5ம் நூற்றாண்டில் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள கோயில் தெருக்களில் இந்த தோசைகள் உருவாகியதாக கூறப்படுகிறது. தென் இந்திய மாநிலங்களில் தோசைக்கு ஒவ்வொரு பெயர் இருந்தாலும், 10ம் நூற்றாண்டில் உள்ள தமிழ் இலக்கியத்தில் 'dosa' என்கிற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது.
தோசைகளின் கதை: தோசை தங்களுக்கு சொந்தமான உணவு என தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உரிமை கொண்டாடி வரும் நிலையில், கர்நாடகா தான் தோசையின் பிறப்பிடம் என்கிறார் உணவு ஆராய்ச்சியாளர் பி. தங்கப்பன் நாயர்.
12ம் நூற்றாண்டில் கர்நாடாகவை ஆண்ட மூன்றாம் சோமேஸ்வர மன்னர் எழுதிய மனசோலாசா (Manasollasa) என்ற புத்தகத்தில் தோசைக்கான செய்முறையை எழுதி வைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர் கூறுகிறார். அந்த பிரிவிற்கு 'தோசகா' என்ற தலைப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. முதலாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தில் தோசை என்கிற சொல் பயன்படுத்தப்பட்டதாக தமிழகத்தை சேர்ந்த உணவு ஆராய்ச்சியாளர் கே டி அசாயா கூறுகிறார்.