சென்னை:நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், தமிழ்நாட்டில் பிரதான எதிர்கட்சியாகச் செயல்பட்டு வரும் அதிமுகவும், தன்னுடைய தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட அதிமுக, பாஜக உடனான மோதல் போக்கு காரணமாக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனையடுத்து, அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தினார். இதனையடுத்து, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்ட 5 பேர் கொண்ட தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அமைத்தார்.
இதனையடுத்து பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை அதிமுக கூட்டணியில் இணைத்து விட வேண்டும் என முழு மூச்சுடன் செயல்பட்டு வருகின்றனர், தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர். அதன்படி, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரைச் சந்தித்து முதல் கட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளனர்.
அதிமுகவில் தற்போது வரை எஸ்டிபிஐ, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தங்களை இணைத்துக் கொண்ட நிலையில், அந்த வரிசையில் தற்போது புதிய தமிழகம் கட்சியும் இணைந்துள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அங்கிருந்து விலகி, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தருவதாகத் தெரிவித்துள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து இரு கட்சிகளும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேனி, ராமநாதபுரம் என இரண்டு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை வழங்குமாறு அதிமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதேநேரம், இந்தியா கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர், அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:புதுச்சேரி சிறுமி சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்; முத்தியால்பேட்டையில் மீண்டும் பதற்றம்..போலீசார் தடியடி