சென்னை:சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாகவே மோசமான வானிலை, கனமழை, இயந்திர கோளாறு போன்ற தொழில்நுட்ப காரணங்களால் விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்படுவது அல்லது விமானங்களின் சேவை ரத்து செய்யப்படுவது என பயணிகளுக்கு கசப்பான அனுபவம் அவ்வபோது நேர்ந்து வந்தது.
இந்நிலையில், இந்த சூழலை பயன்படுத்தி சில மோசடி கும்பல் விமானங்கள் ரத்து, தாமதம் உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்படும் பயணிகளின் செல்ஃபோன் எண்ணை தொடர்பு கொண்டு வருவதாக தெரிகிறது. இந்திய விமான நிலைய ஆணையத்தில் இருந்து பேசுவதாக கூறும் அந்த கும்பல், நீங்கள் பயணிக்க வேண்டிய விமானம் தாமதம் அல்லது ரத்து ஆனதற்கு உங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆசை வார்த்தை காட்டுகின்றனர்.
மேலும், இந்த இழப்பீட்டை பெறுவதற்காக விமான பயணிகளின் ஆதார் கார்டு, பான் கார்டு, ஓடிபி எண் போன்ற விவரங்களை கேட்டுப் பெறும் அக்கும்பல், அவர்களில் சிலரின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை மோசடி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சில விமான பயணிகள் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள், தஙகளது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளம் மூலம் மோசடி கும்பலிடம் இருந்து தப்பிக்க பயணிகளுக்கு எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளனர்.
அதில், 'இந்திய விமான நிலைய ஆணையத்தின் பெயரை பயன்படுத்தி விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து ஆனதற்கு தகுந்த இழப்பீட்டுத் தொகையை கொடுக்கப் போவதாக போலியான செல்ஃபோன் அழைப்புகள் மூலம் பயணிகளை சிலர் ஏமாற்றி வருகின்றனர்.
அதற்கும் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அதைப் போன்ற இழப்பீடுகள் கொடுக்கும் திட்டமும் இல்லை. எனவே இதுபோன்ற போலியான ஃபோன் கால்கள் வந்தால் பயணிகள் யாரும் அதை நம்ப வேண்டாம்.
பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் பயணிக்க இருந்த விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்து தங்கள் சந்தேகங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
மேலும் அந்தப் போலி தொலைப்பேசி அழைப்புகளில் கேட்கப்படும் கேள்விகளை உண்மை என்று நம்பி பயணிகள் தங்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு போன்ற விவரங்களை பகிர வேண்டாம். இதனால் உங்களின் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணம் மோசடி கும்பலால் திருடப்படும்' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை விமான நிலைய அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்ட கேட்டபோது,"விமானம் ரத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் என போலியான தொலைபேசி அழைப்புகள் வந்தால், அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை காண்பித்து உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என்று பயணிகளை அறிவுறுத்தியுள்ளோம். மேலும் இதுபோன்ற அறிவிப்புகள் வந்தால் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, உரிய விளக்கம் பெற வேண்டும்" என அந்த அதிகாரி தெரிவித்தார்,