கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவபர்களை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பான விவரங்களையும் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கள்ளச்சாராயம் விற்பனை நடந்த பகுதிக்கு அருகே நீதிமன்றம், காவல் நிலையம் இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இருக்கிறது.
இவ்வுளவு அரசு அலுவலகங்கள் இருக்கும் முக்கியமான பகுதிகளிலேயே கள்ளச்சார விற்பனை நடந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. முறையான கண்காணிப்பின்மை காரணமாக 35 பேர் இறந்துள்ளனர். இது மிகவும் வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்கிற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன்.
நேற்று முதல் தற்போது வரை 200 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டதாக செய்திகளில் கண்டேன்
நேற்று மதியம் வரை 3 பேர் பலி என செய்தி வந்த நிலையில், அடுத்தடுத்து கிடைத்த தகவல்கள் மிகவும்
அதிர்ச்சியை தந்துள்ளது. அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியில் இவ்வுளவு மோசமாக கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பின்னணியில் இருப்பது யார்?:இந்த கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னணியில் ஆளுங்கட்சியை சேர்ந்த அதிகார கும்பல் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வுளவு துணிச்சலாக கள்ளச்சாராய விற்பனை நடக்க காரணம் என்ன? யார் இவர்களுக்கு உதவுகிறார்கள்? .ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் உதவியாக இருக்கிறார்கள் என்கிற செய்தி தற்போது வரை வருகிறது .
இதனால் மிகப்பெரிய மரண இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 22 பேர் மரக்காணம் கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தார்கள். அப்போதும் நான் கள்ளச்சாராயம் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்டுவதாக கூறினேன். இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்.