மதுரை: மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது, “கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக, பாசிச கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது, இதுதான் இந்தியா கூட்டணியின் அஜெண்டா என்று மேடைக்கு மேடை ஸ்டாலின் பேசினார். ஆனால், இன்றைக்கு பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் தன் ஆட்சியைக் காப்பாற்ற விழா எடுக்கிறார். இன்றைக்கு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர், ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெயர் இடம் பெறவில்லை.
கலைஞர் நாணய வெளியீட்டு விழா மாநில விழா அல்ல, மத்திய அரசு விழா தான் என்று முழு பூசணிக்காயை முதலமைச்சர் ஸ்டாலின் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார். இதை கேள்வி கேட்ட எடப்பாடி பழனிசாமியை அரசியல் நாகரீகம் இல்லாமல், தரம் தாழ்ந்து தனி நபர் தாக்குதலை செய்து, மூளை உள்ளதா? என்று கிண்டலும், நையாண்டியுமாக பேசியுள்ளார்.
நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசு விழாவா? மாநில அரசு விழாவா? என்று அடிப்படை அறிவு கூட இல்லாமல் முதலமைச்சர் கூறுவது மக்களுக்கு வேதனை அளிக்கிறது. இந்த விழா மத்திய அரசு விழா அல்ல என்று இணை அமைச்சர் முருகன் கூறியுள்ளார். பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்கக் கூட்டத்தில், அமைச்சர் ராஜ்நாத் சிங் “திமுக ஊழல் கட்சி என்பதை நாடு அறியும், ஸ்டாலின் ஊழலை இந்தியா முழுவதும் பார்த்துக் கொண்டுள்ளார்” என்று அவரே பேசியுள்ளார்.