புதுக்கோட்டை: திமுக மாவட்ட நிர்வாகி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 180 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருவதையும், அதைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று (மார்ச்.04) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாகப் புதுக்கோட்டை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளருமான விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டனம் முழக்கம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், "அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்குத் தற்போது திமுக பெயர் வைத்து வருகிறது. யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயரை வைப்பது.
எதிர் வரும் காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பல்வேறு திட்டங்களுக்கு வைத்துள்ள பெயர் நிச்சயம் மாற்றப்படும். இது இரு அமைச்சர் அல்ல நான்கு அமைச்சர் வந்தாலும் பெயர் மாற்றுவது உறுதி எனப் பேசினார்.
மேலும், இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக புதுக்கோட்டைத் தெற்கு மாவட்டச் செயலாளர் வைரமுத்து, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் கருப்பையா உள்ளிட்ட மாநில மாவட்ட நகரக் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு.. நடிகர் விஷாலுக்கு கால அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம்!