சென்னை:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அதிமுக, பாமக மற்றும் பாஜக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, “ஆண்டுதோறும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு முறையும் காவல் துறையினர் சஸ்பெண்ட் செய்வதை தவிர உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை. கடந்த 1998ஆம் ஆண்டு ஓசூரில் கள்ளச்சாராயம் குடித்து 100 பேர் உயிரிழந்த வழக்கில், 16 ஆண்டுகள் விசாரணைக்குப் பின் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அதேபோல், கடந்த 2023ஆம் ஆண்டு விழுப்புரத்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தி மெத்தனால் எங்கிருந்து வருகிறது என கண்டறிந்து தடுத்திருந்தால், தற்போது 68 பேரின் மரணம் தடுக்கப்பட்டிருக்கும். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாவட்ட எஸ்.பி சமய் சிங் மீனாவுக்கு எதிராக என்ன விசாரணை நடத்தப்பட்டது? தற்போது அவர் தாம்பரத்தில் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
காவல் நிலையம் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்கப்படும் நிலையில், மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி இந்த வழக்கை விசாரிக்க தகுதியில்லை என்பதால், மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். மெத்தனால் எங்கிருந்து வருகிறது என கண்டுபிடித்து தடுக்காவிட்டால், 2025-ல் எத்தனை பேர் பலியாவார்கள் என்பது தெரியாது. எனவே, சிபிஐக்கு வழக்கை மாற்ற வேண்டும்” என வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “மெத்தனால் எங்கிருந்து வருகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டு, தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் ரகசியமானவை. புலன் விசாரணை அதிகாரியின் ரகசிய அறிக்கையில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன” என விளக்கமளித்தார்.