சென்னை:சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, கூறி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சதீஷ் என்ற இளைஞர் மற்றும் 16 வயது சிறுவன் மீது அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அப்போது, காவல் ஆய்வாளர் தங்களை தாக்கியதாகவும், சிறுவனின் பெயரை புகாரிலிருந்து நீக்க வற்புறுத்தியதாகவும், சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான போக்சோ வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, தமிழகத்தில் உள்ள வெளிமாநில 7 ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜமன் ஜமால், சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.