சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், அதிமுகவினர் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பும் போதெல்லாம் அமளியில் ஈடுபட்டு வெளியேற்றப்படுகின்றனர். மேலும், சட்டமன்றத்தில் இருந்து சம்மந்தப்பட்ட நாட்களில் சஸ்பெண்ட் செய்யப்பட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று அதேபோல அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதுடன் நடப்பு கூட்டத்தொடர் முடியும் வரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டசபையில் இன்று நடந்தது என்ன?
இன்று சபை கூடியதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ''கள்ளச்சாரயம் விவகாரம் தொடர்பாக பேச அனுமதிக்க வேண்டும்'' என கேட்டனர்.
அதற்கு சபாநாயகர், ''கேள்வி நேரம் முடிந்த பின்னர் பேச அனுமதிக்கப்படும்'' என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''பேசுவதற்கு அனுமதி அளிக்க சபாநாயகருக்கு மனம் இல்லை'' என தெரிவித்தார்
அதற்கு சபாநாயகர், ''எதிர்கட்சியினர் பேசுவது அவைக்குறிப்பில் ஏறாது, எதிர்கட்சியினர் அவையில் இருப்பதற்கு விருப்பம் இல்லை.. இந்த கூட்டத்தொடர் முழுவதும் அமளி செய்ய நினைக்கிறிர்கள்''.. என கூறினார்.
அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக பேச அனுமதிக்க கோரி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது சபாநாயகர், ''அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் அமர வேண்டும்.. என்னுடைய பேச்சு திருப்தியாக இல்லை என்றால் நீங்கள் பேசலாம்... இப்போது அமருங்கள், உங்களுக்கு தெரியாத விதியா? நீங்கள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு பதில் தருகிறேன்.. இருக்கையில் அமருங்கள்.. 8 நிமிடமாக அவையை நடத்தவிடாமல் தடுக்கிறிர்கள்''..
''ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்த பிறகும் அதுகுறித்து பேசவிடாமல் தடை செய்யக்கூடாது..பொதுக்கூட்டம் மேடை போல இங்கே நடக்காதீர்கள்..வெளியில் பேச முடிவு எடுத்துவிட்டீர்கள்.. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும்.. அவை காவலர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும்'' என்றார்.
அப்போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ''கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக பேச அனுமதிக்க கோரி அவையில் கோஷமிட்டுக் கொண்டே கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும், சிபிஐ விசாரணை வேண்டும்'' என அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சபை காவலர்கள் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றினர். அதனை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு, நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் பனைத்தொழில், மண்பாண்ட தொழிலை ஊக்கப்படுத்த புதிய அறிவிப்புகள்!