தூத்துக்குடி:தருவைகுளத்தை சேர்ந்த அந்தோணி மகாராஜா மற்றும் தேன் தேனிலா ஆகியோரின் 2 விசைப்படகுகளில் 22 மீனவர்கள், கடந்த ஜூலை 20-ஆம் தேதி ஒரு படகிலும், 23-ஆம் தேதி ஒரு படகிலும், மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி அவர்களை இலங்கை கடற்படையினர் விசாரணைக்கு என அழைத்து, பின்னர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 22 மீனவர்களையும் கைது செய்து வரும் 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுனர்.
இதனைத் தொடர்ந்து இன்று அதிமுக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, தருவைகுளம், மீனவ கிராமத்திற்கு சென்று, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு தேவையான நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்கள் விரைவில் வழங்கப்படும் என்றும், கூறினார்.
மேலும், இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் லட்சுமிபதியை சந்தித்து, கோரிக்கை மனு ஒன்றையும் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜூ, “தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் கிட்டத்தட்ட 25 நாட்கள் தங்கி செவ்வலை என்ற வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபடுவது வழக்கம், அதன்படி ஆழ்கடலில் மீன் பிடிக்கின்ற நேரத்தில் 12 மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது, திசை மாறுபாடு காரணமாக சர்வதேச எல்லையை தொடாவிட்டாலும், அந்த செவ்வலை அதன் எல்லை பகுதியில் தொடும் பட்சத்தில், கைது செய்யப்படும் நடவடிக்கைகள் தொடர் கதையாகவே உள்ளது.
பிரச்சனைக்கு தீர்வு என்ன?: இந்த சர்வதேச கடலை தாண்டாத பட்சத்தில் கூட, இந்த சிக்கல்கள் உள்ளது. எனவே, எல்லை பகுதிக்கு அருகாமையில்தான் வலை இருக்கும் காரணத்தினால், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மீனவர்களை மீட்க கூறி கோரிக்கை வைத்திருக்கிறேன். நமது துறைமுகம் அனைத்து வசதிகளும், உள்ள துறைமுகம். கடல் மைல் தொலைவு தூத்துக்குடிக்கும், இலங்கை சர்வதேச கடல் எல்லைக்கும் அருகாமையில் உள்ளது. இதனை சேட்டிலைட் மூலமாக மத்திய அரசு வெளியுறவுத்துறை மூலமாக அறிவுறுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் தொடர் நிகழாமல் இருக்க நடைமுறைப்படுத்த வேண்டும்.
அது மட்டுமில்லாமல் தருவைகுளம் கிராமத்தில், உள்ள மீனவர்கள் 25 நாட்களுக்கு மேலாக ஆழ்கடலில் தங்கி மீன்பிடித் தொழிலை மட்டும் வாழ்வாதாரமாகக் கொண்டு பிழைக்கின்றவர்கள். இந்நிலையில் தற்போது அவர்களும், அவர்களை நம்பி இருக்கும் குடும்பமும், மிகவும் வறுமையில் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.