சென்னை:நடப்பாண்டிற்கான இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி ஜூன் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மறைந்த உறுப்பினர் புகழேந்தி, குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர்,கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் என அனைவருக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்திய பிறகு பேரவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இன்று நடைபெறும் தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சியான அதிமுக கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில், இன்று தமிழக சட்டப்பேரவை கூடியதும் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேச சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முற்பட்டார்.
அப்போது குறுகிட்ட பேரவை தலைவர் அப்பாவு, கேள்வி நேரம் என்பதால் விதிகளுக்கு மாறாக பேச அனுமதிக்க முடியாது எனவும், கவன ஈர்ப்பு தீர்மானம் வரும்போது அனுமதிப்பதாக பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார். இருப்பினும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை தலைவர் இருக்கை முன்பு பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்டனர்.