சென்னை:அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பான முதல் தகவல் அறிக்கையும் சமூக வலைத்தளங்களில் கசிந்து அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், இயக்கங்களும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.
மேலும், தேசிய மகளிர் ஆணையமும் கண்டனத்தை பதிவு செய்து மனைவியின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றன.
அப்போது, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு இனி விசாரணை செய்யும் எனவும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இ்வ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரை பற்றி தகவல்களை தெரிவித்த சென்னை மாநகர காவல் ஆணையர் மீது தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க:“எஃப்ஐஆர் வெளியானதற்கு என்ன காரணம்?”-அமைச்சர் ரகுபதி புது விளக்கம்!
இந்நிலையில், அதிமுக கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் தஞ்சை நகரின் பல்வேறு பகுதிகளில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார்? என அச்சிட்டு ஆங்கிலத்தில் 'Save Our Daughters' என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதேபோல, சென்னை மாநகர் முழுவதும் ''யார் அந்த சார்'' என்ற வாசகத்துடன் அதிமுகவினர் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். அப்போது போலீசார் போஸ்டர்களை ஒட்டியவர்களை தடுத்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக இந்த வழக்கில் கைதான ஞானசேகரன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டபோது தனது செல்போனில் '' சார் '' என யாரிடமோ பேசியதாக மாணவி புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனால், யார் அந்த சார் என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. இதனை சுட்டிக்காட்டியே யார் அந்த சார் என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சையில் போஸ்டரும் ஒட்டியுள்ளனர்.
மேலும், இந்த குற்றச் செயலை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.