சென்னை : சென்னை, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமையகத்தில், கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது அவர்களிடம் பேசிய ஈபிஎஸ், "அண்மைக்காலத்தில் அதிமுகவின் 10 முதல் 15 சதவீத வாக்குகள் குறைந்து விட்டது. எம்ஜிஆர் காலத்து தொண்டர்களெல்லாம் வயது முதிர்வால் உயிரிழந்து வருவதே அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைய காரணம். வாக்காளர்களில் 40 சதவீதம் பேர் இளைஞர்களாக இருக்கும் நிலையில் அவர்களில் பெரும்பான்மையினரை அதிமுகவில் இணைத்தால் மட்டுமே வாக்குச்சரிவை சரிசெய்ய முடியும்.
சமூக வலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்தும் Facebook, X, insta-வில் அதிமுக குறித்த பதிவுகளைத் தொடர்ந்து எழுதுவதுடன், தனியாக யூடியூப் சேனல்களை உருவாக்கி அதிமுகவிற்கு ஆதரவாக கருத்துகளை பரப்புமாறும் வலியுறுத்தினார்.
அதிமுகவின் சமூக வலைதளப் பக்கங்களை பின்தொடர்ந்து அவற்றில் நேர்மறையான பின்னூட்டங்களை உடனுக்குடன் பதிவிட வேண்டும். நான் நேரடியாக ஐடி-விங் பணிகளை கண்காணித்து வருவதால், சமூக வலைதளங்களில் துணிந்து செயல்படுங்கள் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அதிமுகவின் ஐடி-விங் நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர்கள் சுயமாக செயல்பட அனுமதிப்பதில்லை என்று நிர்வாகிகள் சிலர் குற்றம் சாட்டினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அது போன்ற புகார்களை மாநில தலைமைக்கு தெரியப்படுத்துமாறு கூறினார். மேலும், இளைஞர்களை கவரும் வகையிலான செய்திகளை மட்டும் பகிருங்கள் என்றும் தெரிவித்தார்.