சேலம்:மேச்சேரி அருகே அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பதற்காக வருகை தந்தார். அப்போது வழியில் செலக்கல் திட்டு மற்றும் மல்லிகுந்தம் ஆகிய இரண்டு இடங்களில் அதிமுக கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றிவைத்தார்.
செலக்கல் திட்டு பகுதியில் கொடியை ஏற்றிவைத்து விட்டுப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அறிவித்த 520 அறிவிப்புகளில் ஒரு சிலதை மட்டும் நிறைவேற்றிவிட்டு 100% நிறைவேற்றி விட்டதாகப் பச்சைப் பொய் கூறுகிறார். ஆட்சிக்கு வந்த பின்னர் வாக்களித்த மக்களை மறந்தது திமுக. திமுக இளைஞரணி மாநாடு ரெக்கார்டு டான்ஸ்க்காகவே இரண்டுமுறை தள்ளிவைத்து நடத்தப்படுகிறது.
மதுரையில் அதிமுக நடத்திய எழுச்சி மாநாடு, மக்களுக்கு என்ன செய்வோம் என்று எடுத்துக்காட்டிய மாநாடு. அதிமுக நடத்திய மாநாடு மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நடத்திக் காட்டினோம். அதிமுக ஆட்சியில் இருந்த காரணத்தினால் தான் தமிழகம் இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறது. இந்திய நாட்டிற்கு முன்னோடியாக அதிமுக அரசு இருந்தது” எனத் தெரிவித்தார்.
அதேபோல மேச்சேரி அருகே உள்ள மல்லிகுந்தம் பகுதியில் அதிமுக கொடியை ஏற்றிவைத்து தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இரண்டுமுறை தேதி குறித்து திமுக இளைஞரணி மாநாடு நடத்த முடியாமல் மூன்றாவது முறையாக நடத்துகின்றனர். அதற்குக் காரணம் சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. அதில் யாரும் நுழைய முடியாது. அப்படி நுழைய முயன்றால் மக்கள் விரட்டியடிப்பார்கள்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மக்கள்தான் வாரிசு. இருபெரும் தலைவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே உழைத்தனர். அதிமுக நாட்டு மக்களுக்காகத் திட்டம் தந்தோம். திமுக தனது வீட்டு மக்களுக்காகத் திட்டம் தீட்டி அதில் கொள்ளையடிக்கின்றனர். அவர்களுக்கு எந்தெந்த வகையில் முடியுமோ, அதிகாரம் தந்துள்ளது.