ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சோளிங்கர் பாண்டிய நல்லூர் பகுதியில் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண்ட கனவு மாறிவிட்டது. அவர்கள் இருவரும் தோல்வி பயத்தால் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். என்ன சொல்வதென்று தெரியவில்லை. கடந்த தேர்தலில் 520 பொய்களைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுக. பொய் சொல்ல நோபல் பரிசு தந்தால் அதை ஸ்டாலினுக்குத் தான் வழங்க வேண்டும்.
கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்களால் இனி மக்களை ஏமாற்ற முடியாது. தமிழ்நாடு உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தா எனக் கேள்வி எழுப்பினார். வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.
விமர்சனங்களுக்கு அதிமுக தொண்டன் கூட அஞ்சமாட்டான். மிரட்டலால் எங்களை அடிபணிய வைக்க முடியாது அதிமுக மீது பொய் வழக்குப் போடுவது திமுகவிற்கு வாடிக்கையாகி விட்டது. கீழே உள்ள சக்கரம் மேலே வந்தால் உங்களுக்கும் அதே கதி தான். எங்கள் ஆட்சியில் திமுக மீது எந்த வழக்கும் போடவில்லை, நாங்கள் மக்களுக்காக பணியாற்றுவதை மட்டுமே சிந்தித்தோம்.
திமுக எந்த திட்டங்களையும் கொண்டுவரவில்லை, கொண்டு வந்தால் தானே நாங்கள் குறை கூற முடியும். தில், திராணி, தெம்பு இருந்தால் எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கிய பணிகளுக்கு வெறும் ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டி திறந்து வைக்கிறார்கள்.
விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. அரிசி, எண்ணெய், ஆகியவை விலை உயர்ந்து விட்டது. அதைப் பற்றி கவலை கொள்ளாத, மக்களைப் பற்றிச் சிந்திக்காதவர் தான் முதலமைச்சர் ஸ்டாலின். முதலமைச்சர் போட்டோ ஷுட் செய்வார் அல்லது பளுதூக்குவார் அல்லது சைக்கிள் ஓட்டுவார். இதற்காகவா மக்கள் உங்களைத் தேர்வு செய்தார்கள், கிடைக்கும் நேரத்தில் மக்களுக்கு பணியாற்ற வேண்டும்.
முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, மக்களின் குறைகளைப் பெட்டியை வைத்து வாங்கி செல்லும் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் அதை நிறைவேற்றுவேன் எனச் சொல்லி ஆட்சிக்கு வந்துள்ளார். ஆனால் தற்போது அந்த பெட்டி தொலைந்து விட்டதா அல்லது சாவி இல்லையா? என கேள்வி எழுப்பினார்.