கோயம்புத்தூர்: கோவை துடியலூர் பகுதியில் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் (THGOA) சங்கத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "THGOA சங்கத்தினரின் கோரிக்கையை சட்டமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம். கோவையின் குடிநீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி அணை, கோவை மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த அணையில் 50 அடி வரை நீரை தேக்கலாம். ஆனால், 5 அடிக்கும் குறைவாக சேமிப்பதால் 19 சதவீதம் குடிநீர் இல்லாமல் போகிறது. இதை மாவட்ட நிர்வாகம், திமுக அரசு கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கின்றனர்.
மேலும், 2022ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி அன்று 1,000 கன அடி நீரை தன்னிச்சையாக வெளியேற்றி உள்ளனர். முழுமையாக அங்கு 50 அடி நீரைத் தேக்கினால் ஒரு வருடத்திற்கு குடிநீர் பிரச்னை இருக்காது. இதனைச் செய்யாத கேரள அரசை கண்டிக்கிறோம்.
மழையின் காரணமாக நொய்யல் ஆறு உள்ளிட்டவற்றில் வரும் நீரை குளத்தில் சேமிக்க வேண்டும். ஆனால், குளத்திற்கு வர நீர்வழிப் பாதையை அடைத்துள்ளனர். இதனால் அந்த நீர் வீணாகிறது. தமிழக அரசு கேரள அரசுடன் தொடர்பு கொண்டு நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவாணி அணை தூர்வாரப்பட வேண்டும்.