மதுரை:பரிதிமாற்கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் பார்வையற்ற நபர்களுக்கு இன்று (சனிக்கிழமை) நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, “தமிழக அரசியலில் அண்ணாமலை தன்னை முன்னிறுத்த வேண்டும் என்பதற்கு அவதூறாகப் பேசி வருகிறார். நாகரிகமற்ற அரசியல் பண்பாட்டை தொடர்ந்து விதைத்து வருகிறார். தேர்தலில் மோடி, நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்தும் பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. அண்ணாமலை போன்றவர்களால்தான் பாஜக படுதோல்வியை தழுவியுள்ளது.
அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த அண்ணாமலை தொடர்ந்து சூழ்ச்சிகளை செய்து வருகிறார். அவரது சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது. அதிமுக பற்றி அண்ணாமலை பேசுவது, ஆடு நனைவதற்கு ஓநாய் கவலைப்படுவது போன்று உள்ளது. தமிழக அரசியலில் வெத்து விளம்பரம், பொது வாழ்வில் அனுபவம் இல்லாமல் அவதூறு பரப்பி, அரசியல் பண்பு இல்லாமல் அண்ணாமலை பேசி வருகிறார். எடப்பாடி மீது அவதூறு பரப்பி அடிப்படை ஆதாரம் இல்லாமல் அண்ணாமலை பேசுவது கடும் கண்டனத்துக்குரியது.
பாஜகவில் தற்போது கிரிமினல் பின்புலம் உள்ளவர்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். தற்போது அவர்களுக்கு எதிராக கைது நடவடிக்கைகள் வருகிறது. பாஜகவில் உழைத்த மூத்தவர்கள் அனுபவசாலிகளை எல்லாம் திட்டமிட்டு அண்ணாமலை புறக்கணித்து வருகிறார். தமிழ்நாட்டுக்காக பேரிடர் நிவாரண நிதியைக்கூட பெற்றுத்தர முடியாதவர் அண்ணாமலை. மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டத்துக்காக ஒன்றிய அரசிடம் இருந்து அண்ணாமலை நிதியை பெற்றுத் தந்தாரா?”என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு உள்நோக்கம் கொண்டு எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கிறார். அதிமுக அடித்தளத்தை அசைத்து பார்க்கும் வேலையில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகி என்ற வார்த்தையை அண்ணாமலை வாபஸ் பெறவேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். அதிமுக தொண்டர்கள் கொதித்து எழுந்தால் அண்ணாமலை என்ன விளைவுகளை எதிர்கொள்வார் என்று தெரியாது.
கர்நாடக மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்ட முயற்சிக்கிறார்கள். பாலாற்றின் குறுக்கே அணைகட்ட முயற்சி செய்கிறார்கள். இதற்கெல்லாம் மத்திய அரசு தற்போது வரை வாய் திறக்கவில்லை. காவிரியில் உரிய நீரை பெற்றுத் தர மத்திய அரசு வாய் திறக்கவில்லை.
2019 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம். அப்போது 19.39 சதவீத வாக்குகளைப் பெற்றோம். தற்பொழுது பாஜக கூட்டணி இல்லாமல் 20.46 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம். தமிழகத்தில் பிரதமரை முன்னிலைப்படுத்தி தான் வாக்குகள் விழுந்தன. அண்ணாமலைக்காக யாரும் ஒரு வாக்கு கூட போடவில்லை. முதலீடு போடாமல் லாபம் எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும். அதேபோல், இன்றைக்கு அண்ணாமலை எந்த முதலீடும் செய்யாமல், உழைப்பும் இல்லாமல், தியாகம் செய்யாமல் பலனை அறுவடை செய்ய நினைக்கிறார். அவருக்கு எப்போதும் ஏமாற்றம் தான் கிடைக்கும்.
கடந்த முறை மானிய கோரிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்ட ஒழுங்கு குறித்து கூறியதை அரசு கேட்டிருந்தால், இன்றைக்கு ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட மாநில தலைவர்கள் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். இன்றைக்கு கள்ளக்குறிச்சி சம்பவம் மற்றும் ஆம்ஸ்ட்ராங் கொலையால் தமிழ்நாடு சுடுகாடாக மாறியுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் பழிவாங்கல் இல்லை; வேறு சிலர் மீது சந்தேகம் உள்ளது: சந்தீப் ராய் ரத்தோர் தகவல்