தருமபுரி: 18வது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து, பென்னாகரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மருத்துவர் அசோகன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், வேட்பாளர் அசோகனை ஆதரித்து, பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பிளியனூர், அஞ்சேஹள்ளி, மாங்கரை, பருவதனஹள்ளி, வட்டுவனஹள்ளி, பென்னாகரம் பேரூராட்சி உள்ளிட்ட 19 ஊராட்சிகளில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கக் கோரி, துண்டுப் பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.