திருப்பூர்: நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி உள்ளது. இதனால், அரசியல் கட்சியினர் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
கூட்டணிக் கட்சிகள் உறுதி செய்ததைத் தொடர்ந்து, அதிமுகவின் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்படி, இன்று திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார். இந்நிலையில், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக வேட்பாளராக பெருந்துறையைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருணாச்சலம், கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, அவரது இல்லத்தில் தொண்டர்களுடன் சந்தித்தார். அவருக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். சால்வை அணிவித்து தொண்டர்களிடையே அறிமுகப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது, “முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் அதிமுக 1977-இல் இருந்து 8 முறை ஆட்சியில் இருந்து, சிறந்த ஆட்சியை தமிழகத்தில் தந்துள்ளது. தற்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து வருகிறோம்.
கோபிசெட்டிபாளையம் தொகுதியைப் பொறுத்தவரையில், பல்வேறு தேர்தலில் அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்துள்ளது. இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத அளவிற்கு, தங்களை அர்ப்பணித்துக் கொண்டு எந்த தியாகத்தையும் செய்கின்ற அளவிற்கு ஒரு இயக்கம் உள்ளது என்றால், அது அதிமுக தான். திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் வரலாறு படைக்கின்ற அளவிற்கு அதிமுக வெற்றி வாகை சூடும்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி என்பது, தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றியை ஈட்டித் தருகிற தொகுதியாக உருவாக்குவதற்கு அனைவரும் அயராது உழைக்க வேண்டும். இதற்காக கட்சியின் அனைத்து முன்னோடி பொறுப்பாளர்களும், இயக்கத்திற்கு அரணாக இருந்து, வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணங்களை மேற்கொள்வோம். அதிமுக கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் வாக்கு வித்தியாசம் தமிழ்நாட்டின் முதல் இடத்தை பெற்று இருக்கிறது என்ற வரலாற்றை படைப்போம்” என்றார்.
இதில், சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ்.ரமணிதரன், கோபிசெட்டிபாளையம் முன்னாள் நகர மன்றத் தலைவரும், மாவட்டப் பொருளாளருமான கே.கே.கந்தவேல் முருகன், பெருந்துறை தொகுதி அதிமுக ஒன்றியச் செயலாளர் ரஞ்சித் ராஜ், அருள் ஜோதி செல்வராஜ், ராமசாமி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க:ரூ.2,45,300 பறிமுதல் செய்த பறக்கும் படை; வேலையாட்களின் கூலிப் பணத்தை பறிமுதல் செய்ததாக புலம்பிய நபர் - மணப்பாறையில் பரபரப்பு - Lok Sabha Election