சென்னை: சென்னையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று (ஏப்.23) சென்னை அதிமுக தலைமை அலுவகத்தில் சென்னை மற்றும் சுற்றியுள்ள கட்சி வேட்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் உள்ளிட்டோரை அழைத்து, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக இந்த தேர்தலைச் சந்தித்த விதம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சொதப்பல் தான். ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையத்தின் ஒரு தோல்வியாகத்தான் இந்த தேர்தலைப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு முறையும் 100 சதவீத வாக்குப்பதிவை நிறைவேற்றும் வகையில், வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதுதான் அனைவரதும் எதிர்பார்ப்பு.
ஆகவே, இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுதான் தேர்தல் ஆணையத்தின் முக்கிய கடமை. 100 சதவீத வாக்குப்பதிவு எட்ட ஒவ்வொரு வாக்களாரின் பெயரும் விடுபடாமால் இருக்க, கட்சி சார்பில் பல முறை வலியுறுத்தியும் கூட, அதை தேர்தல் ஆணையம் செய்யவில்லை. பல வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை.
அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றவர்கள் எத்தனை பேர்? வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பொதுமக்கள் அறியும் வண்ணம் தெளிவாக பதில் அளிக்க வேண்டிய கடமை இந்தியா மற்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.