"ராகுல் காந்தி விரலைப் பிடித்துக்கொண்டு நடந்ததால் சுதாவுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு" - முன்னாள் எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு! தஞ்சாவூர்: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபு, கும்பகோண மாநகர பகுதி 1வது வட்டம் முதல் 48வது வட்டம் வரை இரட்டை இலை சின்னத்திற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முதற்கட்டமாக, 1வது வட்டம், கொட்டையூர் கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தைத் தொடங்கினார். திறந்த வாகனத்தில் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து அவர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, கும்பகோணம் மாநகர 19வது வட்டத்திற்கு வந்தார். அப்போது, 19வது வட்ட மாமன்ற உறுப்பினர் ஆதிலட்சுமி ராமமூர்த்தி தலைமையில் நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு நின்று, வேட்பாளர் பாபுவிற்கு உதிரி மலர்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும், பொன்னாடைகள் அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும் வரவேற்றனர்.
அதன்பின் அப்பகுதி மக்களிடையே பேசிய அவர், "கும்பகோணம் முன்னாள் எம்எல்ஏ இராம.இராமநாதன், எடப்பாடியார் அறிவித்திருக்கிற நம்முடைய வேட்பாளர் பாபுவின் குடும்பம் மக்களுக்காக பணி செய்கிற குடும்பம். இவரது தந்தையார் பவுன் ராஜ், பூம்புகார் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்து மக்கள் பணியாற்றியவர்.
தொடர்ந்து மாவட்டச் செயலாளராக பணி செய்து வருபவர். இவர் இந்த மண்ணின் மைந்தர். ஆனால், காங்கிரஸில் அறிவிக்கப்பட்டிருக்கிற வேட்பாளர் ஆர்.சுதா, இளம் தலைவர் ராகுல் காந்தியின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ நடைபயணத்தில், அவரது விரலைப் பிடித்துக்கொண்டு நடந்தார் என்ற ஒரே காரணத்திற்காக, திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார்.
இவர் நமக்குத் தேவையா? நம்முடைய வேட்பாளர் பாபுவிற்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து, அவரை கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். வேட்பாளர் மக்கள் பிரச்னைகளை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண்பார்" என்றார்.
பின்னர், பேசிய வேட்பாளர் பாபு, தனக்கு வாக்களித்தால் மக்களுடைய அனைத்து பிரச்னைகளைத் தீர்க்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் எனவும், என்னை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் பேசினார்.
இதையும் படிங்க:வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் தீவிரம்: மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு! - Lok Sabha Election 2024