தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் வெளிநடப்புக்கு பிறகு அதிமுக கவுன்சிலர் பரபரப்பு பேட்டி! - thoothukudi corporation meeting - THOOTHUKUDI CORPORATION MEETING

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவங்கள், 24 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் உள்ளிட்டவற்றை கண்டித்து 51வது வார்டு அதிமுக கவுன்சிலர் மந்திரமூர்த்தி வெளிநடப்பு செய்தார்.

அதிமுக கவுன்சிலர் மந்திரமூர்த்தி
அதிமுக கவுன்சிலர் மந்திரமூர்த்தி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 11:40 AM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில நேற்று (ஜூன் 28) நடைபெற்றது. இந்த மாநகராட்சி கூட்டத்திற்கு, ஆணையாளர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியது முதலே பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், கூட்டத்தில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி முதலாவதாக பேசினார். அப்போது, "நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்று, 100 சதவீதம் வெற்றி கண்டது.

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இதற்கு காரணமான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தும், தூத்துக்குடி தொகுதியில் சிறப்பாக செயலாற்றி 2வது முறையாக வெற்றி பெற்று நாடாளுமன்ற குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தும் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தேர்தலுக்குப் பின் முதல்முறையாக மாநகராட்சி கூட்டம் கூடியுள்ளது எனவும், தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது" எனக் கூறினார்

இதனைதொடர்ந்து மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் மற்றும் வடிகால் நிதி திட்டத்தின் ஈடுபாடு சார்ந்த நிர்வாக பணிகளுக்காக புதிய நிர்வாக அனுமதி அளித்தல், மாநகராட்சி பகுதிகளில் வரைபடங்களுக்கு மாறாக கட்டப்பட்டு வரும் அனுமதியற்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வார்டுகளில் ஏற்பட்டு வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும், நியமிக்கப்பட்ட 5 நகர அமைப்பு தொழில்நுட்ப உதவியாளர்கள் பணிக்காலத்தை நீடித்தல் மாநகராட்சி பூங்கா மற்றும் பள்ளிகளை சிறப்பாக பராமரித்தல், மாநகராட்சி வணிக வளாகங்கள் வருவாயை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், தருவை ரோடு திரேஸ்புரம் கணேஷ் நகர் மற்றும் பாத்திமா நகர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு தற்காலிக பணியாளர்களை நியமித்தல், மாநகரம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரங்களை அதிக அளவில் வளர்த்து பராமரிக்க நடவடிக்கை எடுத்தல் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் ரூபாய் 24 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்தும், தனது வார்டில் அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனக்கூறியும், மாநகராட்சி கூட்டத்தில் 51வது வார்டு அதிமுக கவுன்சிலர் மந்திரமூர்த்தி கருப்பு சட்டை, பேன்ட் அணிந்து கலந்து கொண்டார்.

இதனைதொடர்ந்து, காவல்துறை உதவியுடன் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வெளிநடப்பு செய்வதாக அதிமுக மாமன்ற உறுப்பினர் மந்திரமூர்த்தி வெளிநடப்பில் ஈடுபட்டார். தூத்துக்குடியில் 6 அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், இரண்டு பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் மட்டுமே வெளிநடப்பு அதிமுக உறுப்பினர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து மாநாகராட்சி கூட்டம் முடிந்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மாமன்ற உறுப்பினர் மந்திரமூர்த்தி கூறுகையில், "தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. மேலும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை செய்து தரவில்லை. தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்ட நிலையில், கள்ளச்சாராய குடித்து 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து கனிமொழி செய்தியாளர்களை கூட சந்திக்க முடியாதவராக இருக்கிறார். சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி சம்பவங்களை கண்டித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். அவரை பேசவிடாமல் தடுத்து அதிமுகவினரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இதனை கண்டித்தும், இன்று தான் வெளிநடப்பு செய்ததாக" கூறியுள்ளார்.

இதையும் படிங்க: லோடுமேனை மிரட்டி மதுபான பெட்டியை பறித்துச் சென்ற மர்ம கும்பல்.. வைரலாகும் வீடியோ! - Gang snatched the liquor box

ABOUT THE AUTHOR

...view details