திருப்பத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மருத்துவர் பசுபதி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதியை ஆதரித்து அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை மற்றும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் பசுபதியின் சொந்த கிராமமான பூங்குளத்திற்கு வந்த போது அங்குள்ள பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை பேசினார்.
அப்போது, "நம்முடைய ஊர்க்காரர், டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக நம்மிடையே வந்து இருக்கிறார். இரட்டை இலையில் வாக்களித்தால் பூங்குளத்துகாரர் டெல்லியில் பேசுவார். பெண்களே உங்களுக்கு நிழல் கொடுப்பது இரட்டை இலை. இரட்டை இலை இல்லாமல் தாமரை மலராது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரைத் தாமரை என்பது கிடையாது.
திமுக இதுவரை செய்தது ஒன்றுதான். அது ஸ்பெக்டரம் ஊழல். காற்றை வியாபாரம் செய்து கொள்ளையடித்தவர்கள் தான் திமுகவினர். அதற்காகத் தான் ராசாவும், கனிமொழியும் திகார் ஜெயிலுக்கு சென்றார்கள்.
உச்ச நீதிமன்றம் ஸ்பெக்டரம் வழக்கை மிகப்பெரிய ஊழல் என்று கூறியிருக்கிறது. ஆனால் இதுவரையில் பாஜக அரசு திமுக மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஊழலை ஒழிப்போம் எனக்கூறும் பாஜக, ஸ்பெக்ட்ரம் ஊழலில் கொள்ளையடித்த திமுக மீது நடவடிக்கை எடுக்காதது தான் இன்றைய கேள்வி" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "திராவிட கட்சிகளில் ஒரு கட்சி காணாமல் போகும் என்று கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் தான் காணாமல் போகும். காங்கிரஸ் காணாமல் போய்விட்டது. கம்யூனிஸ்ட் காணாமல் போய்விட்டது. பாஜக வரவே வராது.
இப்பொழுது இருப்பது பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக, திமுக மட்டும் தான். இந்த கட்சிகள் காணாமல் போகும் என்பதை நம்புகிறீர்களா? காங்கிரஸ் காணாமல் போனதை போல பாஜகவும் காணாமல் போகும். தவறான வழியில் பேட்டி கொடுத்து திராவிட கட்சிகள் காணாமல் போகும் என்பது பகல் கனவு போல் மறந்து விடவேண்டும்.
அதிமுகவைக் காணாமல் போகச் செய்ய வேண்டும் என ஏமாந்து கொண்டு இருப்பவர்கள் தேசிய கட்சியைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் பாஜக வளர்ந்து விட்டதாகக் கூறுகிறார்கள். எங்கே வளர்ந்தது பாஜக. தேர்தல் வரும் பொழுது தெரியும்.
மதவாதக் கட்சிக்குத் தமிழகத்தில் இடம் இல்லை. பாஜக தமிழகத்திற்கு வந்தால் அதிமுக அழிந்து விடும் என்கிறார்கள். திராவிட இயக்கம் தமிழகத்தை அழியவிடாது. அதிமுக, திமுகவிற்கும் தான் போட்டி, ஆனால் மக்கள் அதிமுகவிற்குத் தான் வாக்கு அளிப்பார்கள். மேலும் அதிமுக வேட்பாளர் பசுபதியை வெற்றி பெற வைத்து என்னுடன் டெல்லி அனுப்ப வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதி, விவசாயி மகனுக்காக நாடாளுமன்றத்தில் துணைச் சபாநாயகராக இருந்தவர் இங்கு வந்து வாக்கு சேகரிக்கிறார். அப்போது என்னுடைய அத்தை, மாமா, மச்சான், பெரியப்பா, சித்தப்பா எல்லோரும் இருக்கிறீர்கள் எனக் கண்ணீர் மல்க பேசி கட்சி, சாதி மத பாகுபாடு, பார்க்காமல், இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்த தேர்தல் பிரச்சாரத்தில், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:"கோவை மாப்பிள்ளைக்கு ஓட்டு போடுங்க" - திமுக வேட்பாளர் பத்திரிக்கை அடித்து நூதன பிரச்சாரம்! - Lok Sabha Election 2024