வேலூர்:வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் சட்டவிராதமாக கல்குவாரி நடப்பதாகவும், மணல் கொள்ளை மற்றும் ஏரிகளில் மண் கொள்ளை ஆகியவை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இதனை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகவே, இதை கண்டித்தும், இதில் சம்பந்தப்பட்ட அனைவரது மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர், அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக அரசைக் கண்டித்து, அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்த நிலையில், அப்பகுதியில் மணல் கொள்ளை, அனுமதியின்றி கல்குவாரி நடத்துவது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவது அதிமுக மாவட்டச் செயலாளர் வேலு அழகன்தான் என குற்றம்சாட்டிய திமுகவினர், அப்பகுதி முழுவதும் வால்போஸ்டர்களை ஒட்டினர். மேலும், அணைக்கட்டு சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்களை அழைத்து வந்த திமுகவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.