கோயம்புத்தூர்: செயற்கை நுண்ணறிவு இன்று உலகில் இல்லாத இடமே இல்லை. நாம் பயன்படுத்தும் செல்போன் முதல் வேளாண்மை, கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் போன்ற எல்லாவற்றிற்கும் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் அதிக அளவில் உள்ளது.
இந்த ஏஐ தொழில்நுட்பம் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அதன் பயன்பாடுகள் எளிதாக்கப்பட்டுள்ளது. ஏஐ டெக்னாலஜியைக் கொண்டு பலருக்கும் உதவும் வகையில் ரோபோக்களும் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் இணைந்து மனித செய்கைகளைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ரோபோவை உருவாக்கியுள்ளனர்.
1,600 மணிநேர உழைப்பில் உருவாகியுள்ள இந்த ரோபோ 6 அடி உயரம் 40 கிலோ எடை கொண்டதாகும். 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்களைப் போலவே 26 விதமான செய்கைகளைச் செய்யும் திறன் கொண்ட வகையில் இந்த ரோபோ வடிவமைக்கபட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனிதர்களுடன் உரையாடும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மனிதர்களைப் போன்ற செய்கைகளைக் கொண்ட இந்த ரோபோவானது மருத்துவமனை, கல்லூரி, வணிக வளாகங்கள் என பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என வடிவமைத்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதனை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மனிதர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப அந்த ரோபோ செயல்படும் நிலையில் வீட்டில் தனியாக உள்ள வயதானவர்கள் இதனுடன் உரையாடவும், குழந்தைகளுடன் விளையாடவும் பயன்படுத்த முடியும்.
தற்போது உள்ள கட்டளைகளை மேம்படுத்தி மனிதர்களைப் போல அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் வகையில் இதனை விரைவில் மேம்படுத்த உள்ளதாகவும், மனிதனின் கோபம், ஆச்சரியம், அன்பு, அனைத்தையும் முகத்தில் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், இந்த ரோபோவை 3D வடிவமைப்பு மூலம் அதன் பாகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கண் இமைகள் மற்றும் அதன் செயல்பாடுகளுக்காக பல்வேறு வகையான மோட்டார்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு பொருளை ரோபோவிடம் கொடுத்தால் அது என்ன பொருள் என கேட்டு அதற்கான முழு விவரங்களையும் இந்த ரோபோ தருகிறது. அனைத்து துறைகளையும் சார்ந்த பொறியியல் மாணவர்கள் இதனை வடிவமைத்துள்ள நிலையில், இதன் பயன்பாடுகள் குறித்து மற்ற மாணவர்கள் அறிந்து கொள்ள கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் சரவணன் கூறுகையில், “எங்கள் கல்லூரி மாணவர்கள் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து பல பரிசுகளை வென்று உள்ளனர். அதுமட்டுமன்றி, மாணவர்களின் முயற்சியால் அதிவேக ட்ரோன் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நிலத்திலும், நீரிலும் பயன்படக்கூடிய வாகனங்களையும் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மாணவர்களின் அடுத்தகட்ட முயற்சி தான் இந்த செயற்கை நுண்ணறிவு ரோபோ. இந்த ரோபோ நம்ம கேட்கின்ற கேள்விகளுக்கு சரியான பதிலைக் கொடுக்கும். மனிதர்களை போல் கை, கால்களை அசைக்கும் திறன் கொண்டது.
இதன் அடுத்தகட்டமாக மனிதர்களைப் போன்று முகப்பாவனைகள் எப்படி இயற்கையாகக் கொண்டு வருவது தொடர்பான வேலை செய்து வருகிறோம். இன்னும் 3, 4 மாதங்களில் ரோபோவிற்கு முக பாவனைகள், கோபம், சிரிப்பு போன்றவற்றை வெளிப்படுத்தக் கூடிய பாவனைகளை நாங்கள் கொடுத்து விடுவோம். இன்னும் 3 மாதத்தில் ரோபோ பயன்பாட்டுக்கு வந்து விடும்" என தெரிவித்தார்.
இதுகுறித்து மாணவர் தனுஷ்குமார் கூறுகையில், "இந்த ரோபோவை தயாரிக்கும் பணியில் நான் கடந்த ஒன்றரை வருடமாக பணியாற்றி வருகிறேன். இந்த ரோபோவானது மனிதர்கள் செய்யக்கூடிய செய்கைகளைச் செய்யும். இந்த ரோபோ தான் இந்தியாவின் முதல் Function ரோபோ.
15 பேர் கொண்ட குழுவாக செல்பட்டு பல துறைகளால் கலந்து இந்த ரோபோ உருவாக்கப்பட்டது. அடுத்தகட்ட அப்டேட்டாக ரோபோவிற்கு மனித முக பாவனைகளை கொடுக்க இருக்கிறோம். அதற்கான வேலையை ஆரம்பித்து விட்டோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. ரூ.2 கோடி கேட்டு கடத்திய மாணவன் 3 மணி நேரத்தில் மீட்பு.. வெளியான பகீர் ஆடியோ! - school student kidnapped in madurai