சென்னை:2024 - 2025ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தில், சுமார் ரூ.42,281 கோடி மதிப்பீடு கொண்ட வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) தாக்கல் செய்தார். இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட் முக்கிய அம்சங்கள் குறித்து முதன்மைச் செயலாளர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா, "அனைத்துப் பயிர்களுக்குமான திட்டங்கள் மா, பலா வாழைத்தண்டு, எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி போன்றவற்றிற்கும் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய திட்டங்கள் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மண்வளத்தைப் பேணிக் காப்பது இந்த பட்ஜெட்டில் முக்கிய திட்டமாகும். சுமார் 2 லட்சம் ஏக்கரில் பசுந்தால் உரப்பயிர் பரவலாக்கம், மண்புழு உரப்படுக்கைகள், உர தொட்டிகள், திரவ உயிர் உரங்கள் ஊக்குவித்தல் போன்றவை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் மண் வளத்திலிருந்து மக்கள் நலம் தான் இந்த பட்ஜெட்டின் நோக்கம்.
உடல் ஆரோக்கியம் பேணும் வகையில், (low glycemic index ) சர்க்கரை அளவு குறைந்துள்ள பாரம்பரிய நெல் விதைகளை விநியோகம் செய்தல், அதுபோன்று அரிசிகளைக் குறித்து ஆராய்ச்சி செய்தல் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படும். அதேபோல வட்டாரத்திற்கு ஒரு கிராமத்திற்கு உயிர் வேளாண்மை குறித்து ஒரு மாதிரி பண்ணை அமைத்து, உதாரணக் கிராமமாக மாற்றக் கூறியுள்ளோம்.
ஒரு கிராமத்திற்கு ஒரு பயிரைச் செயல் விளக்கம் செய்ய வேண்டும் என 15,280 கிராமங்களைத் தேர்வு செய்துள்ளோம். பிற மாநிலங்களில் உயர் விளைச்சல் ரகம் நெல் இருந்தால் அதையும் இங்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். தானியங்கி மின்னணு நீர்ப் பாசன அமைப்புகள் செய்துள்ளோம். தோட்டக்கலை பண்ணைக்குத் தேவையான இயந்திரக் கண்காட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.