சென்னை:தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து மக்கள் அதிகமானோர் சென்னைக்கு திரும்பும் சூழலில், மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமான கட்டணங்கள் அதிகரித்துள்ளது. ஆனால், சென்னையில் இருந்து இந்த பகுதிகளுக்கு செல்லும் விமானங்களில் இன்று கட்டணங்கள் குறைவாக உள்ளது.
தீபாவளி மற்றும் அதனையொட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறைகள் வந்ததால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் இன்று (திங்கள் கிழமை) விடுமுறை முடிந்து கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற் கூடங்கள் வேலை நாட்களாக தொடங்குவதால், சொந்த ஊருக்கு சென்றிருந்த மக்கள் ஒட்டு மொத்தமாக நேற்று மாலையில் இருந்து சென்னைக்கு திரும்பி கொண்டு இருக்கின்றனர்.
அரசு பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள், ரயில்கள், கார்களில் சென்னைக்குத் திரும்பி வந்து கொண்டு இருக்கின்றனர். அதோடு பெரும்பாலானோர் விமானங்களில் நேற்று இரவில் இருந்து தற்போதுவரை சென்னைக்கு வந்துகொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: தீபாவளி விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பிய மக்கள்.. ஸ்தம்பித்துப் போன சாலைகள்!
இதனால் சென்னை விமான நிலையத்திலும் வருகை பகுதியில் பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது. ஆனால், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் இல்லை .இதனால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணங்கள் குறைவாகவும் அதே நேரத்தில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் அதிகமான கட்டணங்களையும் பயணிகளிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது.