சென்னை: 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்.19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு, மார்ச் 20ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதி, அதாவது இன்று வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில், கடந்த வாரம் முதல் இன்று வரை மாநிலம் முழுவதும் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் களம் காணும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் ஒருசிலரின் சொத்து மதிப்பு மற்றும் கடன் மதிப்பு உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொன் ராதாகிருஷ்ணன்: கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு, ரூ.64 லட்சத்து 3 ஆயிரத்து 778 மதிப்பிலான அசையும் சொத்துக்களும் ரூ.6 கோடியே 99 லட்சத்து 40 ஆயிரத்து 155 மதிப்பிலான குடும்ப சொத்தாக அசையா சொத்துக்களும் உள்ளன. இதனைத் தவிர்த்து, கையிருப்பு ரொக்கமாக ரூ.55,000 உள்ளதாகவும் வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனின் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
கனிமொழி: தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ரூ.38 கோடியே 77 லட்சத்து 79 ஆயிரத்து 177 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.21 கோடியே 82 லட்சத்து 31 ஆயிரத்து 850 மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளன. இதனைத் தவிர்த்து, ரூ.60 லட்சத்து 60 ஆயிரத்து 187 மதிப்பிலான வங்கிக் கடன் உள்ளதாகவும், கையிருப்பு ரொக்கம் ரூ.13,500 உள்ளதாகவும் வேட்பாளர் கனிமொழியின் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
எல்.முருகன்: நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு ரூ.1 கோடியே 2 லட்சத்து 95 ஆயிரத்து 369 மதிப்பிலான அசையும் சொத்துக்களும் ரூ.1 கோடியே 19 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளன. இதனைத் தவிர்த்து, ரூ.20 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடன் உள்ளதாகவும், கையிருப்பு ரொக்கம் ரூ.50 ஆயிரம் உள்ளதாகவும் வேட்பாளர் எல்.முருகனின் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
சு.வெங்கடேசன்: மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ரூ.98 லட்சத்து 26 ஆயிரத்து 389 மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளன. மேலும், ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் அசையா சொத்துக்கள் உள்ளன. இதில், ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் பூர்வீக சொத்தாகும். இதனைத் தவிர்த்து, கையிருப்பு ரொக்கம் ரூ.3.50 லட்சம் உள்ளதாகவும் வேட்பாளர் சு.வெங்கடேசனின் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ராதிகா சரத்குமார்: விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ரூ.27 கோடியே 5 லட்சத்து 34 ஆயிரத்து 12 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.26 கோடியே 40 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளன. இதனைத் தவிர்த்து, ரூ.6 கோடியே 54 லட்சத்து 41 ஆயிரத்து 426 மதிப்பிலான அரசுக்குச் செலுத்த வேண்டிய கடன் மற்றும் ரூ.14 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரத்து 253 மதிப்பிலான வங்கிக் கடன் உள்ளதாகவும், கையிருப்பு ரொக்கம் ரூ.33,01,635 உள்ளதாகவும் வேட்பாளர் ராதிகா சரத்குமாரின் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
சௌமியா அன்புமணி: தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு ரூ.12 கோடியே 5 லட்சத்து 6 ஆயிரத்து 986 மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளன. மேலும், ரூ.48 கோடியே 18 லட்சத்து 76 ஆயிரத்து 200 மதிப்பில் அசையா சொத்துக்கள் உள்ளன. இதில், ரூ.30 கோடியே 86 லட்சத்து 6 ஆயிரத்து 200 மதிப்பிலான சுய சம்பாத்திய சொத்தும் மற்றும் ரூ.17 கோடியே 29 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான குடும்ப சொத்தும் உள்ளது. இதனைத் தவிர்த்து, ரூ.9 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரத்து 738 மதிப்பிலான வங்கிக் கடன் உள்ளதாகவும், கையிருப்பு ரொக்கம் ரூ.90,000 உள்ளதாகவும் வேட்பாளர் சௌமியா அன்புமணியின் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
விஜய பிரபாகரன்: விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு, ரூ.11 கோடியே 38 லட்சத்து 4 ஆயிரத்து 371 மதிப்பிலான அசையும் சொத்துக்களும் ரூ.6 கோடியே 57 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளன. இதில், ரூ.1.5 கோடி மதிப்பிலான சுய சம்பாத்திய சொத்தும் மற்றும் ரூ.5 கோடியே 52 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான குடும்ப சொத்தும் உள்ளது. இதனைத் தவிர்த்து, ரூ.12 கோடியே 80 லட்சத்து 78 ஆயிரத்து 587 மதிப்பிலான வங்கிக் கடன் உள்ளதாகவும், கையிருப்பு ரொக்கம் ரூ.2.50 லட்சம் உள்ளதாகவும் வேட்பாளர் விஜய பிரபாகரனின் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இதுவரை ரூ.69.70 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு! - Satyabrata Sahoo