கல்பாக்கம்:சென்னை அடுத்த கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள 500 மெகா வாட் ப்ரோட்டோடைப் எனப்படும் அணுமூல முன்மாதிரி அதிவேக ஈனுலையில் எரிபொருள் நிரப்ப அணுசக்தி கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேலும், ஈனுலையில் மின் உற்பத்தி தொடங்க தேவையான பணிகளை மேற்கொள்ளவும் அணுசக்தி கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள அணுமூல முன்மாதிரி அதிவேக ஈனுலையை ஆய்வு செய்த அதிகாரிகள் இந்த அனுமதியினை வழங்கி உள்ளனர். புளுடோனியத்தை அணுஎரிபொருளாக மாற்றும் திட்டத்தின் கீழ் ஈனுலையில் 500 மெகா வாட் மின் உற்பத்திக்கான எரிபொருளை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
எரிபொருள் நிரப்புவது மற்றும் மின் உற்பத்திக்கான பணிகளை தொடங்குவது என மூன்று கட்டங்களாக பணிகளை மேற்கொள்ள அணுசக்தி கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் அனுமதித்து உள்ளனர். அதிவேக ஈனுலையில் எரிபொருள் நிரப்புவதை தொடர்ந்து மீதமுள்ள பணிகளை அடுத்தடுத்த கட்டங்களாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி கல்பாக்கம் அணுமின் நிலையம் வந்த பிரதமர் மோடிம் ஈனுலையின் பாஸ்ட் பிரீடர் ரியாக்டரில் (Fast Breeder Reactor) 500 மெகாவாட் அளவிலான கோர் லோடிங் எரிபொருள் நிரப்பப்படுவதை பார்வையிட்டார். திரவ சோடியத்தை குளிர்வித்து அதன் மூலம் மின் உற்பத்திக்கான பணிகள் நடைபெறும் நிலையில், பாதுகாப்பு காரணங்களாக பல்வேறு கட்டங்களாக மூலக்கூறுகள் நிரப்பும் பணி நடைபெற்றது.