திண்டுக்கல்: இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய மூன்று சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் சா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா அதினியம் 2023 ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டங்கள் நாடு முழுவதும் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
இந்த சட்டங்கள் அமல்படுத்தியதை கண்டித்தும், இதனை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல்லில் இம்மூன்று சட்டங்களை அமல்படுத்திய ஜூலை 1ம் தேதியை வழக்கறிஞர்கள் கருப்பு நாளாக அனுசரித்தனர். மேலும் அன்றைய தினம் நீதிமன்ற வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டாம் நாளான நேற்று நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மூன்றாம் தேதியான இன்று திண்டுக்கல் பழைய நீதிமன்ற வளாகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பேரணியாக கிளம்பி, பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் வழியாக பேரணியாக சென்று திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.