காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பங்கு நீரை முழுமையாகப் பெற்று தர வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு திமுகவிற்கு கண்டனங்களை பதிவு செய்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதில், "இந்த ஆண்டு காவிரியில் இருந்து கர்நாடக அரசு நமக்குத் தர வேண்டிய பங்கு நீரை முழுமையாகப் பெறாமல் வேடிக்கை பார்க்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகம் காவிரியிலிருந்து மாதாந்திர அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும். இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, நெல் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. அரசு, நெல் குவின்டாலுக்கு 2ஆயிரத்து 310 ரூபாய் என்று நிர்ணயித்திருந்த நிலையில், வியாபாரிகள் நெல் குவின்டாலுக்கு 3ஆயிரத்துக்கு மேல் வழங்குவதால், விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குச் செல்லாமல் வியாபாரிகளிடம் விற்பனை செய்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்குச் சென்றபோது, அப்பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் சம்பா மற்றும் தாளடிப் பயிர்கள் கருகி இருந்ததை நான் நேரடியாகப் பார்வையிட்டேன். உடனடியாக காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட விடியா தி.மு.க. அரசை வலியுறுத்தினேன். 3.2.2024 நிலவரப்படி, 120 அடி உயரமுள்ள மேட்டூர் அணையில் சுமார் 70 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அதாவது, சுமார் 33 டி.எம்.சி. அளவு தண்ணீர் உள்ளது. இதுவே, கர்நாடக அணைகளில் 124 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் 92 அடியும், 65 அடி உயரமுள்ள கபினியில் 54 அடியும், 129 அடி உயரமுள்ள ஹேரங்கி அணையில் 102 அடியும் தண்ணீர் உள்ளது.
இந்த ஆண்டு, கர்நாடக அரசு காவிரியில் நமக்குரிய பங்காக வழங்க வேண்டிய நீரில் சுமார் 90 டி.எம்.சி தண்ணீர் நிலுவை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தனது அரசியல் கூட்டாளியான கர்நாடகாவில் அமைந்திருக்கும் காங்கிரஸ் அரசிடம் காவிரியில் நமக்குரிய பங்கை வலியுறுத்திப் பெற எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல், கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து நாடாளுமன்றத்தில் 38 உறுப்பினர்களைக் கொண்ட விடியா திமுக, காவிரியில் நமக்குரிய பங்கினைப் பெறுவதற்கு இதுவரை எந்தவிதமான முனைப்போ, நடவடிக்கையோ எடுக்கவில்லை.