Former Minister O.S.Manian தஞ்சாவூர்:மயிலாடுதுறை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில், அதிமுக கூட்டணியின் சார்பில் அதிமுக வேட்பாளர் பாபுவின் அதிமுக தேர்தல் பணிமனையை, மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கும்பகோணம் ஆயிகுளம் சாலையில், இன்று (ஏப்.12) முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, தேர்தல் பணிமனையில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் கலந்துகொண்டனர், தேர்தல் பிரச்சார வியூகங்கள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
அப்போது பேசிய ஓ.எஸ்.மணியன், "அதிமுகவில் இரட்டை தலைமை இருந்த போது, நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏ சட்டத்தை பாஜக கொண்டு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் மட்டுமே அதிமுக தரப்பிலிருந்த நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்.
இந்த சமயத்தில், எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் இன்றியே ஓபிஎஸ் தன்னிச்சையாக முடிவெடுத்து, அதன்படி, பாஜகவின் சிஏஏ சட்டத்திற்கு ஓபிஎஸ் மகன் ஆதரவு தெரிவித்தார். சிஏஏ சட்டம் வருவதற்கு ஓபிஎஸ் தான் காரணம். இதனைத் தொடர்ந்தே, அதிமுகவிற்கு இரட்டை தலைமை வேண்டாம் ஒற்றை தலைமை தான் வேண்டும் என முடிவு செய்யப்பட்டு.
மேலும் அந்த முடிவு, பொதுக்குழுவில் தீர்மானமாகக் கொண்டு வரப்பட்டு ஏகமானதாக நிறைவேற்றப்பட்டு, எடப்பாடி பழனிசாமியைப் பொதுச்செயலாளராக்கத் தேர்வு செய்தோம். அதனை அடுத்து, அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இனி எந்த காலத்திலும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டது" என்று கூறினார்.
இந்த நிகழ்வில் அதிமுக தஞ்சை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.கே.பாரதிமோகன், மாநகர செயலாளர் இராமநாதன், ஒன்றிய கழக செயலாளர் சோழபுரம் அறிவழகன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"கோவையில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் பாஜகவினர் உள்ளனர்" - திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பிரத்தியேக பேட்டி!