தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அதிமுக கட்சி அலுவலகத்திலிருந்து ஏ.கே.எஸ்.தியேட்டர் ரோடு, எட்டையபுரம் சாலை, மாதாகோவில் தெரு, பத்தரகாளியம்மன் கோயில், வேலாயுத புரம் ஆகிய இடங்களில் தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து நேற்று(ஏப்.12) முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு இரட்டை இலை சின்னத்திற்குத் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குகள் சேகரித்தனர்.
பின்னர், பத்தரகாளியம்மன் திருக்கோயில் மற்றும் புதுரோடு ஏஜி சபையில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் சிவசாமி வேலுமணி அமோக வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்தார்.
அதன்பின் பிரச்சார கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர், "அண்ணன் எடப்பாடி பழனிசாமி மீட்டெடுத்த இரட்டை இலை சின்னத்திலே, உழைக்கின்ற தொண்டர்களுக்குத் தான் அதிமுகவில் வாய்ப்பு என்பதற்கு அடையாளம் தான் சிவசாமி வேலுமணி குடும்பம். தூத்துக்குடியில் நம்பர் ஒன் வேட்பாளர் அதிமுக வேட்பாளர்.
வெற்றி வாய்ப்பு அதிமுகவிற்கு இருக்கின்ற நிலையில், இன்றைக்குத் திமுக கூடாரமே கதி கலங்கி உள்ளது. திமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் பார்த்தாலே தெரியும் அவருடைய தோல்வி பயம். இதற்குப் பாடம் புகட்டுகின்ற நிலை எப்போது வரும் என்ற நிலைக்கு ஏங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த நாள் தான் ஏப்.19 ஆம் தேதி.
நாடாளுமன்ற உறுப்பினர் செய்ய வேண்டியதைக் கடந்த காலத்தில் நான் அமைச்சராக இருக்கும்போது டெல்லிக்கு அழைத்துச் சென்று 18% ஜிஎஸ்டி வரியை 12% சதவீதமாகக் குறைத்துக் காட்டினேன். கோவில்பட்டியில் உற்பத்தியாகின்ற கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெற்றுக் கொடுத்தது அதிமுக தான்.
ஆனால் திமுக கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வாங்கி கொடுத்தது என்று சொல்கிறார்கள். இது ஒரு பச்ச பொய். இது ஒரு உதாரணம். பொய்யும், புரட்டும் அவர்களுக்கு கைவந்த கலை. இன்றைக்குப் பொய்யும், புரட்டும் அரசாளுகின்றது. மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றார்கள். எனவே வரப்போகின்ற தேர்தலில் வெற்றிக் கொடி நாட்டப்போவது அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி" என்றார்.
இதையும் படிங்க:"பாஜக அரசை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும்" - மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள்! - Lok Sabha Election 2024