கோயம்புத்தூர்: கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதேபோல அதிமுக சார்பில் அக்கட்சியின் ஐடி விங் மாநிலச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக மற்றும் பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டிபாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் எம்.எல்.ஏ கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியில் பிரச்சாரத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சமயத்தில் அதிமுகவின் பிரச்சார வாகனத்தை, பாஜகவின் பிரச்சார வாகனம் ஒன்று இடித்து விட்டு நிற்காமல் சென்றதாகவும், இதனை அடுத்து அப்பகுதியில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் எம்.எல்.ஏ கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தைச் சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.