மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை எல் அண்ட் டி (L&T) நிறுவனம் தொடங்கி உள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டப்படும் என கடந்த 2018ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு 2023ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் துவங்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில் 870 படுக்கை வசதியுடன் மருத்துவமனை, 38 படுக்கைகளுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சை மையம், மாணவர்கள், செவிலியர்களுக்கென வகுப்பறை கட்டடம், ஆய்வகக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் கட்டுவதற்காக ரூ.1624 கோடி அறிவிக்கப்பட்ட நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுவதற்கான முழு நிதியும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜைகா நிறுவனத்தின் மூலம் பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.