நிகர் ஷாஜி காணொளி மூலம் கலந்துரையாடிய நிகர்ஷாஜி (Credits - ETV Bhrat Tamil Nadu) தென்காசி: பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி தென்காசி மாவட்டம் இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்ற இந்த கல்லூரி கனவு குறித்த வழிகாட்டி நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்று பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பின்னர் என்ன படிக்கலாம்?, போட்டித் தேர்வுக்குத் தயாராவது எப்படி?, கல்லூரி படிப்புக்குக் கல்விக் கடன் பெறுவது எப்படி உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.
இந்த வழிகாட்டு நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானியும், ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குனருமான நிகர் ஷாஜி காணொளி காட்சி வாயிலாக மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர், "மாணவர்கள் கல்லூரி படிப்பில் எதை வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் அதில் கவனம் என்பதைவிட முழு கவனத்துடன் படித்தால் வெற்றி பெற முடியும்" என்று கூறினார். மாணவ மாணவிகளும் உயர் கல்வி குறித்தான சந்தேகங்களை அவரிடம் கேள்விகளாக எழுப்பி அதற்கான பதில்களைத் தெரிந்து கொண்டனர்.
இதையும் படிங்க:ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. கடைசி தேதி எப்போது? - Teachers Job Transfer Application