Adithya L-1 Project Director Nigar Shajii Press meet தென்காசி: தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி. இவர் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுடன் இன்று (ஜன. 29) கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "இஸ்ரோவின் பணி என்பது தொடர்ச்சியானது. அடுத்தடுத்து சந்திரயான், ககன்யான் என பல்வேறு பணிகள் இஸ்ரோ மூலம் நடைபெற்று வருகின்றன.
இந்திய வானிலை ஆய்வு மைய ஆய்வுகளுக்கு இஸ்ரோவின் 2 செயற்கைகோள்கள் இயங்கி வருகின்றன. அவற்றின் மூலம் தகவல்களை பெற்று வானிலை ஆய்வுகளுக்கு பயன்படுத்துகின்றனர். வெளிநாட்டு செயற்கைகோள்களை கொண்டு விண்வெளியை ஆய்வு செய்தாலும் பிரதானமாக இஸ்ரோவின் செயற்கைகோளின் தகவல்களையே பயன்படுத்துகின்றனர்.
ஆதித்யா எல்-1 முனையில் இருந்து சூரியனை 24 மணி நேரமும் காண்காணிக்க முடியும். ஆதித்யா எல்-1 தொடர்ந்து தகவல்களை அனுப்பி வருகிறது. அந்த தகவல்களைப் பெற்று விஞ்ஞானிகளிடம் கொடுப்போம். அதன் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள். விண்வெளி ஆய்வு என்பது எல்லா நாடுகளுக்கும் அவசியமானதாகி விட்டது.
சர்வதேச அளவில் விண்கல ஆய்வுக்கான சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ககன்யான் திட்டத்தில் 2 பேரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் உள்ளது. அதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள் விண்வெளிக்கு 2 பேரை அனுப்பும் திட்டம் நிறைவேறும். கோள்களை ஆய்வு செய்வதற்கான திட்டங்கள் இஸ்ரோவிடம் உள்ளன" என்று கூறினார்.
இதையும் படிங்க:"திமுக மாணவரணி அமைப்பாளர் என்பது ஜில்லா கலெக்டருக்கு சமம்" - ஆ.ராசா எம்பி!