மதுரை: மனமகிழ் மன்றங்கள் விதிகளின் படி செயல்படுகிறதா? என்பது குறித்து மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, பதிவுத்துறை செயலர் மற்றும் பதிவுத்துறை தலைவர் தரப்பில் ஆய்வு செய்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், "தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல் படுத்துவதை இலக்காக கொண்டுள்ளது. ஆனால் மனமகிழ் மன்றங்கள் எனும் பெயரில் தனியார் மது கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சங்கத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டும்தான் மது விற்க முடியும். ஆனல் தமிழகத்தில் FL 2 என்ற உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் சட்ட விரோதமாக உறுப்பினர் அல்லாதவருக்கும் மதுவை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறது.
இவ்வாறு விதிகளை மீறும் மனமகிழ் நிறுவனங்களின் பதிவுகளை பதிவு துறை ரத்து செய்யலாம். ஆனால் மனமகிழ் மன்றங்கள் அதற்கான விதிமுறைகளை மீறி செயல்பட்டாலும் அரசியல் பின்புலம் கொண்டவர்களில் தலையிட்டால் அதன் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதில்லை. இவை தொடர்பாக நடவடிக்கை கோரி பதிவு துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே தமிழகத்தின் அனைத்து மனமகிழ் மன்றங்களிலும் ஆய்வு மேற்கொண்டு, விதி மீறி செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றங்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இதையும் படிங்க:"பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத்தை பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டுமா?"- உயர்நீதிமன்றம் வேதனை!