சென்னை: கடந்த 2022ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது, சென்னை மாநகராட்சியின் 49வது வார்டில் திமுகவைச் சேர்ந்தவர்கள் கள்ள ஓட்டு போடுவதாக புகார் எழுந்தது. அப்போதைய நிலையில், திமுக பிரமுகர் நரேஷ் குமார் என்பவரை பிடித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவருடன் இருந்த அதிமுகவினர், திமுக பிரமுகர் நரேஷ் குமார் மீது கள்ள ஓட்டுப் போடுவதாக குற்றம்சாட்டினார்.
இதுமட்டுமல்லாது, திமுக பிரமுகர் நரேஷ் குமாரின் சட்டையைக் கழற்றி, அவரை அரை நிர்வாணமாக அழைத்துச் சென்று போலீசாரிடமும் ஒப்படைத்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, திமுக பிரமுகர் நரேஷ் குமாரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக, இந்த கைது நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனும் மற்றும் சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்த புகாரை கடந்த ஜூலை மாதம் மாநில மனித உரிமைகள் ஆணையம் முடித்துவைத்தது. ஆனால், தான் அளித்த புகாரில் தனது விளக்கத்தைக் கேட்காமல் வழக்கை முடித்து வைத்ததாகக் கூறி, ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.