சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து வந்தனர்.
இந்த நிலையில், ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் டி.ஏ.வி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 310-க்கு, சுரேந்தர் நகர் ஆறாவது தெருவை சேர்ந்த தம்பதியினர் வாக்களிக்க வந்துள்ளனர். அப்போது, வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் இந்தியில் இருந்துள்ளது.
இதனால், வாக்குச்சாவடியில் இருந்த முகவர்கள் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை கேட்டுள்ளனர். ஆனால், அவர்களிடம் தேர்தல் ஆணையம் விநியோகிக்கும் வாக்காளர் அடையாள அட்டை இல்லை. மாறாக ஆதார் அடையாள அட்டையை வைத்து அவர்கள் வாக்களிக்க வந்துள்ளனர். வாக்காளர் அடையாள அட்டை இல்லாததால், வாக்களிப்பதற்கு அனுமதி மறுத்து, வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தல் அலுவலரிடம் முறையிட்டுள்ளனர். இதனால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், அவர்களின் வாக்காளர் வரிசை எண்ணை வைத்து, தேர்தல் ஆணையம் இணையதளத்தில் சரிபார்த்துள்ளனர். அதில் அவர்களுடைய பெயர், புகைப்படத்துடன் இந்தியில் இருந்துள்ளது. வாக்காளர் பட்டியலிலும் பெயர், புகைப்படத்துடன் இந்தியில் இருந்ததால், ஆதம்பாக்கம் சட்ட ஒழுங்கு போலீசார் அவர்கள் வாக்களிக்க அனுமதித்துள்ளார். இதையடுத்து கணவர், மனைவி இருவரும் வாக்களித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
அதேபோல், ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆதம்பாக்கம் கருணிகர் தெருவில் உள்ள நகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 255 மற்றும் 256-ல், தேர்தல் ஆணைய அதிகாரிகள் இல்லாததால், வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியிலில் தங்களின் பெயர்கள் இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கும், வரிசை எண் கண்டுபிடிப்பதற்கும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதில், வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், தேர்தல் ஆணைய செயலியின் மூலமாக தங்களின் பெயர், வரிசை எண்ணை கண்டுபிடித்துள்ளனர். ஆனால், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு பெயர் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வாக்களிப்பதற்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால்
வாக்காளர்கள் பலர் ஓட்டு போடாமல் திரும்பி சென்றுள்ளனர். இதனையடுத்து, இது குறித்து ஆலந்தூர் தாசில்தார் துளசி ராமனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க:கோவை மக்களவைத் தொகுதியில் 64.42% வாக்குப்பதிவு..சூலூரில் அதிகபட்சமாக 75.33% வாக்குகள் பதிவு! - Lok Sabha Election 2024