மதுரை:மதுரை மாவட்டம், திருப்பாலை அருகே உள்ள இஸ்கான் கோயிலில் நடைபெற்ற ஜென்மாஷ்டமி நிகழ்வில் கலந்து கொள்ள தனது கணவருடன் மதுரை வந்திருந்த நடிகை நமீதா, நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்யச் சென்றுள்ளார். ஆனால், அங்கு நமீதாவிடம் இந்து என்பதற்கு ஆதாரமாக சான்றிதழ் கேட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த நமீதா, "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய சென்றபோது, நானும் எனது கணவரும் இந்து தான் என்பதற்கு சான்றிதழ் கேட்டார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களுக்குஅ சென்றுள்ளேன். ஆனால், எந்த கோயில்களிலும் இதுபோன்று கேள்வியை யாரும் எழுப்பியது இல்லை. திருப்பதியில் கூட நம்மிடம் உள்ள முகவரிச் சான்றுக்கான ஆதாரங்களை மட்டுமே கேட்பார்களே தவிர, இதுபோன்று கேட்டதில்லை.
திருப்பாலையில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு வந்திருக்கிறோம் என்று தெரிந்தும் கூட, இதுபோன்று நடந்து கொண்டது வேதனை அளிக்கிறது. பாஜக கட்சி என்று அடையாளத்தோடு இங்கு நாங்கள் வரவில்லை. அப்படி வருவதாக இருந்திருந்தால், அதற்குரிய நபர்களோடு தொடர்பு கொண்டு நாங்கள் கோயிலுக்கு வந்திருப்போம். ஆகையால் பாஜகவுக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது தனிப்பட்ட எங்களுடைய பயணம். விஐபி என்ற அடிப்படையில் எங்களை அனுமதிக்கவில்லை என்றாலும் கூட, பொதுமக்களில் ஒருவராகக் கூட அனுமதித்திருக்க வேண்டும்.
அவர்கள் கேட்டதில் கூட நான் குறை சொல்லவில்லை, ஆனால் கேட்ட விதம் தான் மிகவும் தவறு. தேவையான ஆதாரங்களை இவர்கள் கேட்டிருந்தார்கள் என்றால், அதில் ஒன்றும் தவறில்லை. யாருக்கும் எந்தவித தொந்தரவும் தரக்கூடாது என்பதற்காக முகக்கவசம் அணிந்தே சென்றோம். ஆனால், நாங்கள் தான் வந்திருக்கிறோம் என்பதை உயர் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்திவிட்டு தான் கோயிலுக்குள் செல்ல முயன்றோம்.