சென்னை:இசைப்புயல் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமானபவதாரிணி (47) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (ஜன.25) காலமானார். அவரது உடல் இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் இன்று (ஜன.26) மாலை கொண்டுவரப்பட்டு இளையராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இளையராஜா தனது மகளின் மறைவிற்கு "அன்பு மகளே" என அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் இளையராஜா வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்து நடிகர் சூரி பேசுகையில், "எந்த தகப்பனுக்கும் நடக்கக் கூடாத துயரம் இது. உலகத்தில் பலர் கஷ்டத்தில் இருக்கும் பொழுது இளையராஜாவின் இசை, மக்களுக்கு ஆறுதலாக இருந்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் இன்று அவர் கஷ்டத்தில் இருக்கும் பொழுது அவருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் எதுவும் கிடையாது.
வாழ்நாளில் மறக்க முடியாத பதிவை எனக்கு இளையராஜா சார் கொடுத்துள்ளார். அவர் இசையில் அவர் வரிகளில் திரையில் நான் ஒரு உருவமாக இருந்திருக்கிறேன் என்பது பாக்கியம். ஐயா குடும்பத்திற்கு அந்த கடவுள் தான் மிகப்பெரிய ஆறுதலாக இருக்க வேண்டும்" என்றார்.
நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜ்கூறுகையில், "குழந்தைகளின் விளையாட்டு சாமான்கள் பொம்மை என்று சொல்வார்கள். ஆனால், கடவுளுடைய விளையாட்டு பொம்மைகள் மனிதர்கள். இவ்வளவு திறமைகள் இருந்தும் சின்ன வயதில் பவதாரிணி போன்றவர்களைக் கடவுள் அழைத்து கொள்வது என்பது மிகவும் கஷ்டமான விஷயம்" என்றார்.
இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா பேசுகையில், "மனசு ரொம்ப கஷ்டமா இருக்கிறது. வேலை நேரங்களில் பவதாரிணியை பார்த்துப் பயப்படுவேன். அதெல்லாம் ஒன்றுமில்லை பயப்படாதீங்கனு சொல்லுவாங்க. சத்தமா கூட பேசமாட்டாங்க. அவங்க குரல் உலகம் எல்லாம் ஒலித்தாலும் அவர் இல்லை என்பது வருத்தமாக உள்ளது" என வேதனை தெரிவித்தார்.
நடிகர் ராமராஜன்பேசுகையில், "அண்ணன் இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மறைவு கலை உலகத்திற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்குப் பெரிய இழப்பு. துயரத்தில் வாழும் அண்ணன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறினார்.
இயக்குநர் வெற்றிமாறன் அஞ்சலி சொலுத்திவிட்டு கூறுகையில், "பவதாரிணியின் மறைவு இசை உலகத்திற்கும் இளையராஜா குடும்பத்துக்கும், இளையாராவிற்கும் ஒரு பேரிழப்பு. இளையராஜா சார் இசையைக் கேட்டு வளர்ந்த அனைவருக்கும் இந்த இறப்பு என்பது ஒரு பேரிழப்பு" என்றார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறுகையில், "தமிழ் சினிமாவில் மிகவும் பெயர் பெற்றவர் நாடாளுமன்ற உறுப்பினர் இளையராஜா. அவரது புதல்வி பவதாரிணி சிறந்த பாடகி. பாரதி படத்தில் 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலுக்காகத் தேசிய விருது வாங்கி தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர். அவரது இழப்பு, தமிழ் சினிமாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பு" என தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்கூறுகையில், "தமிழ் திரையுலகில் வரலாறு படைத்திட்ட இசைஞானி இளையராஜா அன்பு மகள் இசைகுயில் பவதாரிணி, 250க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். காலம் நம்மிடையே அவரை பறித்து விட்டது. வாழ்ந்திருந்தால் இன்னும் பல படைப்புகள் கிடைத்திருக்கும். சிறிய வயதிலேயே தேசிய விருது பெற்றவர்.
நானும் இசை பிரியன். மெல்லிய குரலோடு பாடும் பாடல் இன்றைக்கும் காதுகளில் ஒலித்து மன ஆறுதலை தரும். அந்த ரீதியில் அன்பு சகோதரி பவதாரிணி இல்லை என்ற சூழலை நினைக்கும் போது அனைவருக்கும் பேரிழப்பாகும். அவர் மறைந்தாலும் அவர் குரல் நம்மோடு வாழ்ந்து நிலைத்திருக்கும்" என வேதனை தெரிவித்தார்.
சென்னையில் உள்ள இளையராஜா வீட்டில் பவதாரிணியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றிரவு சென்னையில் இருந்து இளையராஜாவின் சொந்த ஊரான தேனி பண்ணைபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள இளையராஜாவின் பங்களாவில் பவதாரிணியில் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இதையும் படிங்க:“பள்ளிக்கு என் மகள் பெயர் வைக்க வேண்டும்” முதலமைச்சர் விருது பெற்ற ஆயி பூரணம் அம்மாள் கோரிக்கை!