சென்னை:விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக அறிவித்த விஷால் பட நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் குறுக்கு விசாரணைக்காக, நீதிபதி P.T. ஆஷா முன் நடிகர் விஷால் இன்று ஆஜரானார். லைகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, விஷாலிடம் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது, லைகா மற்றும் விஷால் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த விஷால், இந்த ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், தன்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து பெற்றதாகவும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி, நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும்? மிகவும் புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.