தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TVK Conference Live: த.வெ.க மாநாட்டு மேடையில் கட்சியின் தலைவர் விஜய் தோன்றினார்!

TVK CONFERENCE
தவெக மாநாட்டு அரங்கம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

விழுப்புரம்: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இக்கட்சிக்கு இன்று (அக்.27) தான் முதல் மாநில மாநாடுஎன்றாலும், பலம்பெறும் அரசியல் கட்சியின் மாநாடுபோல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு த.வெ.க கட்சியினர் தேர்வு செய்தனர். அக்டோபர் 4 ஆம் தேதி மாநாட்டிற்கான பணிகளை தொடங்கி, மாநாட்டிற்காக பந்தல், மேடை , விளக்குகள் அமைக்கும் பணிகளில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முழு வீச்சில் ஈடுபட்டனர்.

மாநாடு நடைபெறக்கூடிய பகுதியில் வேலு நாச்சியார், பெரியார், அம்பேத்கர், காமராஜர், தமிழன்னை மற்றும் தமிழ் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர் ஆகியோரின் கட் அவுட்களுடன் விஜயின் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து அழகு முத்துக்கோன், பெரும்பிடுகு முத்தரையர், வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவர், மருது சகோதரர்கள் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளது, அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது.

இந்த நிலையில், இன்று (அக்.) மாலை நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதற்கு, இன்று காலை முதலாக த.வெ.க தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் தங்களது குடும்பங்களுடன் வந்துகொண்டிருக்கின்றனர். இதனால் மாநாடு நடைபெறும் பகுதியில் அதிக கூட்டம் காணப்படுகிறது.

LIVE FEED

4:23 PM, 27 Oct 2024 (IST)

மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை..

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகள் ஆகியோரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் விஜய்

4:18 PM, 27 Oct 2024 (IST)

த.வெ.க மாநாட்டை அதிர வைத்த விஜயின் ரேம்ப் வாக்..!

மாநாட்டின் மேடையில் இருந்து தொண்டர்கள் நடுவே போடப்பட்டுள்ள இணைப்பு பாலத்தில் விஜய் ரேம்ப் வாக் செய்தபடி மக்கள் அனைவருக்கு வணக்கம் கூறினார். அப்போது, தொண்டர்கள் அளித்த கட்சி துண்டு அனைத்தையும் வாங்கி அணிந்துகொண்டார்

4:06 PM, 27 Oct 2024 (IST)

தவெக மாநாட்டு மேடையில் தோன்றினார் விஜய்...

மாநாடு மேடைக்கு வருகை தந்தார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்

3:54 PM, 27 Oct 2024 (IST)

தளபதி கோஷம்!

இன்னும் சற்று நேரத்தில் மாநாடு மேடைக்கு விஜய் வருகைதரவுள்ள நிலையில், மாநாட்டுத் திடலில் "தளபதி... தளபதி..." என தொண்டர்கள் தொடர்ச்சியாக கோஷம் எழுப்பி வருகின்றனர்.

3:49 PM, 27 Oct 2024 (IST)

மேடையை அலங்கரித்த மயிலாட்டம்!

மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், தேவராட்டம் என பல்வேறு ஆட்டங்களை பறை இசைக்கும், உருமி இசைக்கும் கலைஞர்கள் ஆடி மாநாட்டுக்கு வருகைதந்துள்ளவர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

3:29 PM, 27 Oct 2024 (IST)

பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் களைக்கட்டும் மாநாடு!

விஜயின் 50ஆவது படமான சுறா படத்தில் இடம்பெற்ற வெற்றிக் கொடி பாடல் ஒலிக்கப்பட்டதை அடுத்து தொண்டர்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, மாநாட்டு மேடையில் போர் பறையாட்டம் உள்ளிட்ட தமிழக நாடுப்புர கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

3:15 PM, 27 Oct 2024 (IST)

தொடங்கியது த.வெ.க மாநாடு!

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொண்டர்களின் ஆர்ப்பரிப்புகளுக்கு மத்தியில் த.வெ.க கட்சி பாடலுடன் தொடங்கியது.

2:43 PM, 27 Oct 2024 (IST)

விஜய்க்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

நடிகர் விஜய்க்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

2:40 PM, 27 Oct 2024 (IST)

தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!

தவெக மாநாட்டிற்கு 11 மருத்துவ முகாம்கள் உள்ளன. இதில் 300 மருத்துவர்கள் மற்றும் 25 ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஒவ்வொரு முகாம்களிலும் 50 நபர்களுக்கு மேல் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், அவர்கள் அனைவரும் பெரும்பாலும் அதிக வெயிலின் காரணமாகவே வருகின்றனர்.

2:21 PM, 27 Oct 2024 (IST)

சாலையில் ஸ்தம்பித்த வாகனங்கள்.. மாநாட்டிற்கு நடந்தே செல்லும் தொண்டர்கள்!

த.வெ.க மாநாட்டிற்கு திருச்சி - சென்னை சாலையில் வந்த வாகனங்கள் அனைத்தும் கடும் போக்குவரத்து நெரிசலால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் முடங்கியது. இந்த நிலையில், சாலையின் அனைத்து திசைகளிலும் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட வாகனங்கள் மூலம் மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள், சாலை மார்க்கமாக சுங்கச்சாவடியில் இருந்து சுமார் 7கி.மீ தூரமுள்ள மாநாட்டு திடலுக்கு நடந்தே செல்கின்றனர்.

2:16 PM, 27 Oct 2024 (IST)

பைக் விபத்தில் உயிரிழந்த த.வெ.க தொண்டர்!

சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் பகுதியிலிருந்து த.வெ.க மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்ற இளைஞர்கள் இருவர் தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, எதிர்த்திசையில் எம் சாண்ட் மணலுடன் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2:06 PM, 27 Oct 2024 (IST)

விபத்தில் சிக்கிய த.வெ.க மாநாட்டிற்கு சென்ற தொண்டர்கள்!

சென்னை நன்மங்கலத்தில் இருந்து த.வெ.க மாநாட்டிற்கு செல்வதற்காக விழுப்புரம் நோக்கி சென்ற வேன் சேலையூர் சந்தோசபுரம் அருகே கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக வேனில் பயணித்த 11 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், விபத்துக்குள்ளான வேனின் ஓட்டுநர் மட்டும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1:58 PM, 27 Oct 2024 (IST)

சென்னையில் இருந்து த.வெ.க மாநாட்டிற்கு வந்த தொண்டர் ரயில் விபத்தில் உயிரிழப்பு!

சென்னையில் இருந்து த.வெ.க மாநாட்டிற்கு செல்வதற்காக விழுப்புரத்திற்கு டிக்கெட் எடுத்த 2 பேர் விக்கிரவாண்டி தாண்டியதும் ரயிலிலிருந்து குதித்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நிதிஷ் குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். இது குறித்த போலீசார் விசாரணையில், மாநாட்டு பந்தலின் மின் விளக்குகளை பார்த்ததும் உற்சாக மிகுதியில் குதித்ததாக தெரியவந்துள்ளது.

1:46 PM, 27 Oct 2024 (IST)

வெயிலால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மக்கள்!

த.வெ.க மாநாட்டிற்கு 300 மருத்துவர்கள் கொண்ட 11 மருத்துவ முகாம்கள் மற்றும் 25 ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த மருத்துவ முகாம்களில் தற்போது வரையில் 50 நபர்களுக்கும் மேல் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், அவர்கள் அனைவரும் பெரும்பாலும் அதிக வெயிலின் காரணமாகவே பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயார் நிலையில் உள்ள ஆம்புலன்ஸ்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)

1:29 PM, 27 Oct 2024 (IST)

மாநாட்டில் மயங்கி விழுந்த மாணவன்!

வேலூரிலிருந்து மாநாட்டில் பங்கேற்க வந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் மாநாட்டு பந்தலில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இந்த நிலையில், அந்த மாணவருக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1:24 PM, 27 Oct 2024 (IST)

சுட்டெரிக்கும் வெயிலிலும் விஜய்க்காக காத்திருக்கும் தொண்டர்கள்!

மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் உட்காரும் சேர்களை எடுத்து தலையில் கவிழ்த்துக் கொண்டும், துண்டு மற்றும் குடையை பிடித்தபடியும் அமர்ந்துள்ளன. இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய தொண்டர்கள், "வெயில் கடுமையாக இருந்தாலும் விஜய்க்காக இங்கு வந்துள்ளோம். வெயில், மழை பார்க்காமல் எவ்வளவு நேரம் ஆனாலும் இருந்து அவரை பார்த்துவிட்டு தான் செல்வோம்" என கூறினர்.

வெயிலில் விஜய்க்காக காத்திருக்கும் தொண்டர்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)

1:14 PM, 27 Oct 2024 (IST)

சிற்றுண்டிக்கு போட்டா போட்டி!

த.வெ.க மாநாட்டு பந்தலில் உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டபோதிலும், சாலையின் இருபுறங்களிலும் உணவு மற்றும் தின்பண்டங்கள் விற்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாநாட்டில் வழங்கப்பட்ட சிற்றுண்டிகள் மற்றும் தண்ணீர் பாட்டில் வாங்க தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு போட்டி போட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சிற்றுண்டி வாங்க முண்டியடித்த தொண்டர்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)

1:07 PM, 27 Oct 2024 (IST)

தயார் நிலையில் உள்ள மருத்துவ குழு!

மாநாட்டு முகப்பின் முன்பாக ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொண்டர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுவும் தயார் நிலையில் உள்ளது.

பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ள போலீசார் மற்றும் மருத்துவ குழு (Credit - ETV Bharat Tamil Nadu)

12:50 PM, 27 Oct 2024 (IST)

"20 லட்சம் பேர் கூட மாநாட்டுக்கு வருவார்கள்" - த.வெ.க நிர்வாகிகள் பெருமிதம்!

உணவு வசதிகள் குறித்துஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பேட்டியளித்த த.வெ.க நிர்வாகிகள், "மாநாட்டுக்கு 5 லட்சம் பேர் வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அதற்கு ஏற்ற வகையில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மிக்சர், பிஸ்கெட், தண்ணீர் பாட்டில் கொண்ட சிற்றுண்டி பாக்கெட்டுகள் தொண்டர்களுக்கு வழங்கப்படுகிறது. தொடர்ந்து வரும் தொண்டர்கள் எண்ணிக்கையை பார்க்கும்போது 20 லட்சம் பேர் கூட மாநாட்டுக்கு வருவார்கள் என்று தெரிகிறது. அதிகம் பேர் வந்தாலும் கூட அதனை சமாளிக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்று கூறினர்.

தவெக நிர்வாகிகள் பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu)

12:40 PM, 27 Oct 2024 (IST)

கியூ.ஆர் கோட் மூலம் அட்டெண்டன்ஸ்!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்களின் எண்ணிக்கையை கியூ.ஆர் கோட் (QR Code) மூலம் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வந்தவர்களின் விவரங்கள் மற்றும் வருகையைப் பதிவு செய்வதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக மாநாடு அரங்கம் முழுவதும் ஆங்காங்கே கியூ.ஆர் கோட்கள் வைக்கப்பட்டுள்ளது.

தவெக மாநாடு அட்டெண்டன்ஸ் கியூ ஆர் கோட் (Credit - ETV Bharat Tamil Nadu)

12:24 PM, 27 Oct 2024 (IST)

மாநாட்டு பந்தலில் குவிந்து வரும் தொண்டர்கள்!

விக்கிரவாண்டியில் நடிகர் விஜயின் த.வெ.க முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக ஏராலமான தொண்டர்கள் விடிய விடிய மாநாடு நடைபெறும் அரங்குக்கு த.வெ.க கொடிகளை கட்டியபடி இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள், பேருந்துகளில் வருகை தந்தபடி உள்ளனர்.

மாநாடு அரங்கை நோக்கி செல்லும் தொண்டர்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)

ABOUT THE AUTHOR

...view details