திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மறைந்த நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோரால் முன்னெடுத்து நடத்தப்பட்ட தேசிய நெல் திருவிழாவில் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். நெல் திருவிழாவில் கலந்து கொள்ள வருகை தந்த சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
தேசிய நெல் திருவிழா நடைபெற்ற காட்சி (Credits-ETV Bharat Tamil Nadu) இதனை தொடர்ந்து மேடைக்குச் சென்ற சிவகார்த்திகேயனுக்கு மறைந்த நெல் ஜெயராமன் குடும்பத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "நெல் ஜெயராமன் 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனால் நடத்தப்பட்ட உலகப் புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் நெல் ஜெயராமனுக்கு நான் உதவி செய்ததாக கூறினார்கள் அது உதவி அல்ல அது என்னுடைய கடமை என்று தெரிவித்தார்.
அழிந்து போன 174 பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்திருப்பது விவசாயத்தில் ஒரு புரட்சி என்று கூறிய அவர் இது போன்ற நெல் திருவிழாக்கள் ஒவ்வொரு ஊரிலும் நடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். மேலும் இத்தகைய நெல் திருவிழா செய்தியை நான் திரைப்படங்களின் வாயிலாக நிச்சயம் கொண்டு சேர்ப்பேன் என்று உறுதியளித்தார்.
தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகளின் தோழன் என தேசிய நெல் திருவிழா குழுவினர் சார்பில் பட்டம் வழங்கி நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நெல் திருவிழா குறித்த செய்தியை வெளி உலகத்துக்கு அனைவரும் கொண்டு சேர்க்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: அப்பன் சிவனுக்கு வடம் அளித்த திருசெந்தூர் முருகன் - நெகிழ்ச்சியில் பக்தர்கள்!