சென்னை: விஜய் மில்டன் இயக்கி விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்தில் சத்யராஜ், சரத்குமார், மேகா ஆகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
நடிகர் சத்யராஜ் (Credits - ETV Bharat Tamil Nadu) அப்போது பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “இந்த கதை எழுதும் போதே விஜயகாந்த் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் நினைத்தார். விஜயகாந்த் உடல்நலம் இல்லாமல் இருந்ததால் அவரால் இதில் நடிக்க முடியவில்லை. ஒரு வருடம் காத்திருந்தோம். அவரது குடும்பத்தினரும் முயற்சி செய்தனர். அவர் மறைவுக்கு பிறகு ஏ.ஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்த அனுமதி கேட்டோம். பின்னர் அவருக்கு பதிலாக சத்யராஜ் நடித்துள்ளார். அதற்கு பிறகு சத்யராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகரிக்கப்பட்டது” என்றார்.
விஜய் மில்டன் பேசும் போது, “இது நடக்க விஜய் ஆண்டனி மற்றும் தனஞ்செயன் தான் காரணம். விஜய் ஆண்டனியும் நானும் 20 ஆண்டு கால நண்பர்கள். அவரை நாயகனாக முதலில் நான்தான் நடிக்க வைக்க நினைத்தேன். அது மிஸ் ஆகிவிட்டது. எனது படங்களில் கெட்டவன் அழிவதில் உடன்பாடில்லை. அவனுள் இருக்கும் கெட்டது தான் அழிய வேண்டும் என நினைப்பவன் நான். விஜய் ஆண்டனி பிஸியாக இருந்ததால் இப்படத்தில் ஒரு பாடல் மட்டுமே போட்டுக் கொடுத்தார். பின்னணி இசை மற்றும் சில பாடல்கள் வேறு சிலர் போட்டுக் கொடுத்தனர்” என்றார்.
சத்யராஜ் பேசும்போது, “மக்கள் என் பக்கம் படத்தின் தலைப்பு எம்ஜிஆருக்கு சொந்தமானது. இந்த தலைப்பை கேட்டதும் எம்ஜிஆர் ஓகே சொல்லிவிட்டார். எம்ஜிஆருக்கு டப்பிங் பேசிய ஒரே நபர் நான் தான். சிவாஜி நடிக்க விரும்பிய பெரியார் வேடத்தில் நான் நடித்தேன். விஜயகாந்த் நடிக்க வேண்டிய வேடத்தில் நான் இந்த படத்தில் நடித்தேன். அதற்கு இயக்குநருக்கு நன்றி. அவரை விஜி என்றுதான் அழைப்பேன். எங்கள் இருவருக்கும் நடந்த காமெடியை தனி புத்தகமாக வெளியிடலாம்.
எம்ஜிஆர் பாடல் உன்னை அறிந்தால் பாடலுக்கு சிறந்த உதாரணம் விஜய் ஆண்டனி. எனக்கு முடி இல்லாததால் நிறைய கெட்டப்புகள் கிடைத்தது. முடி இருந்திருந்தால் கட்டப்பா கூட கிடைத்திருக்காது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால் பலரும் எனக்காக வேண்டிக்கிறேன் என்றனர். கடவுளுக்கும் என்னை பிடிக்கும். கடவுளை நான் தொந்தரவு செய்வதில்லை. அதனால் அவருக்கு என்னை பிடிக்கும். நான் கொஞ்ச நாட்கள் வில்லனாக நடிக்க கூடாது என்று பிடிவாதமாக இருந்தேன். ஆனால் இப்போது பகத் பாசில், எஸ்.ஜே சூர்யா என அனைவரும் வில்லனாக கலக்கி வருகின்றனர்” என்றார்.
பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “தற்போது உள்ள கார்ப்பரேட் கம்பெனிகள் எதையும் வெளியே சொல்லக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டுள்ளனர். அவர்கள் சொல்லாமல் நான் சொல்லக்கூடாது. கூலி படத்தில் ரஜினி உடன் நடிக்கிறேன். அதை படக்குழு அறிவித்துவிட்டது. மோடி படத்தில் நடிக்க யாரும் என்னை கேட்கவில்லை. அப்படியே நடித்தாலும் மணிவண்ணன் மாதிரி இயக்குநர் இயக்கினால் உள்ளதை உள்ளபடி எடுப்பார்கள். வெற்றி மாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் இயக்கினால் மோடி பயோபிக் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க:கிருத்திகா உதயநிதியின் ‘காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு! - KADHALIKKA NERAMILLAI SHOOTING Wrap