சென்னை:பல்லாவரம் அருகே நடிகர் ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு செலவு செய்து ஆர்ப்பரித்த தீவிர ரசிகர், தற்போது கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் சோக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ரஜினி ரகு(54), ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சித்ரா என்பவருடன் திருமணமாகியுள்ளது. தீவிர ரஜினிகாந்த் ரசிகரான ரகு கடந்த 48 வருடமாக அனகை ரஜினிகாந்த் ரசிகர்கள் மன்றத்தின் தலைவராக இருந்து வந்துள்ளார்.
மேலும், ரஜினியின் பிறந்த நாள் மற்றும் திரைப்படம் வெளியாகும் போது, தனது சொந்த செலவில் அன்னதானம், பள்ளி மாணவர்களுக்கு பை, பாடப்புத்தகம், சீருடை, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்தார். இதற்காக நண்பர்கள், உறவினர்கள், வங்கிகள் மூலமாக சுமார் ரூ.10 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கி செலவு செய்ததாக ரகுவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று வழக்கம் போல் ரகுவின் மனைவி வேலைக்குச் சென்ற நிலையில், அப்போது கடன் பணத்தைக் கேட்டு வீட்டிற்கு வந்த தனியார் வங்கி ஊழியர், ரகுவை தகாத முறையில் பேசி திட்டியதாகக் கூறப்படுகிறது. அதனால், மன உளைச்சலில் இருந்த ரகு வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து IPC Sec 174 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: